திருமுல்லைவாயல் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் மனைவிக்கு கத்திக்குத்து: சக போலீஸ்காரர் கைது

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ் (32). ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் போலீஸ்காரர். இவரது மனைவி கோமளா (21). தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. தற்போது கோமளா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். அதே போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சதீஷ் (31). இவரும், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3ம் அணியில் போலீஸ்காரர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சதீஷ் செல்போன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு அதிக பணத்தை இழந்து கடனாளி ஆனார். இதையடுத்து கோவிந்தராஜிடம் கடனுக்கு பணம் தருமாறு சதீஷ் கேட்டுள்ளார். அப்போது தனது மனைவி கோமளா பணம் கொடுக்க கூடாது என்று கூறி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை கோவிந்தராஜ் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் கோமளா தனியாக இருந்துள்ளார். காலை 6.30 மணிக்கு கோவிந்தராஜ் வீட்டுக்குள் சதீஷ் சென்றுள்ளார். பின்னர், அங்கு இருந்த கோமளாவிடம்,  எனக்கு ஏன் பணம் தரக்கூடாது என கோவிந்தராஜிடம் கூறினாய்? என கேட்டு தகராறு செய்துள்ளார்.  பின்னர், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, கோமளாவை சரமாரியாக குத்தியுள்ளார் சதீஷ். இதில் ேகாமளா கழுத்து, கை உள்பட பல இடங்களில் காயமடைந்து துடித்தார். அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர்,  அவர்கள் படுகாயமடைந்த கோமளாவை மீட்டு வானகரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் சதீசை நேற்று மாலை கைது செய்தனர்.

ஆபரேஷன் மூலம் குழந்தை மீட்பு

கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்த கோமளா 7 மாத கர்ப்பிணி என்பதால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக டாக்டர்கள்  கூறினர். பின்னர் உறவினர்கள் ஒப்புதலுடன் கோமளாவிற்கு டாக்டர்கள்  அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது, குழந்தை நலமாக உள்ளதாகவும்  டாக்டர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: