பெருங்குடி குப்பை கிடங்கில் பெண் தலையை தேடும் பணி நிறுத்தம்: தூத்துக்குடி விரைகிறது போலீஸ்

வேளச்சேரி: சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம். இவரது மனைவி சந்தியா (35). துணை நடிகை. இவரது நடத்தையில் சந்தேகப்பட்ட பாலகிருஷ்ணன் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டிகளில் வீசினார்.   இந்த விவகாரத்தில் 2 கால்கள், ஒரு கை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இருந்து மீட்கப்பட்டது. இடுப்பில் இருந்து தொடை வரையான பாகம் ஜாபர்கான்பேட்டை மேம்பாலத்தின் கீழ் அடையாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. மனைவியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டார்.  கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலை, உடல், மற்றொரு கை கிடைக்கவில்லை. இவற்றை கண்டுபிடிக்க பெருங்குடி குப்பை கிடங்கில் 14 தினங்களாக போலீசார் மாநகராட்சி ஊழியர்களுடன் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் தேடி வந்தனர்.

இதற்காக சுமார் 500 அடி நீளம், 100அடி அகலத்திற்கு 25 அடி ஆழத்திற்கு கீழ் குப்பையை கிளறி தேடியும் உடல் மற்றும் தலை பாகங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் தேடும் பணியை நிறுத்தினர்.  

இந்த வழக்கில் போலீசாருக்கு கிடைத்த சந்தியாவின் உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைக்காக தூத்துக்குடியில் உள்ள  சந்தியாவின் குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் குழந்தைகளை அழைத்து வர பாலகிருஷ்ணனின் பெற்றோர் காலதாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து குழந்தைகள் மற்றும் பாலகிருஷ்ணன் பெற்றோர் ஆகியோரிடம் விசாரிக்க பள்ளிக்கரணை போலீசார் தூத்துக்குடி செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: