கம்பி பொருத்தி 2 மாசமாச்சு ரயில்வே சப்வேக்கு ஆஸ்பெட்டாஸ் எப்போது?

* ராமகிரி மக்கள் கேள்வி

குஜிலியம்பாறை : ராமகிரி ரயில்வே சப்வேயில் கம்பிகள் பொருத்தி 2 மாதங்களாகியும் ஆஸ்பெட்டாஸ் அமைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்கும் போது  சிலசமயம் ரயிலில் அடிபட்டு உயிர்பலி ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு  தற்போது ஆளில்லா ரயில்வே கிராசிங்கை முற்றிலும் அகற்றி பொதுமக்களின்  போக்குவரத்திற்காக சுரங்கபாலம் அமைத்து வருகின்றனர்.

அதன்படி  பாளையம்- திண்டுக்கல் இடையே ரயில் செல்லும் வழித்தடங்களில் 7 ஆளில்லா  ரயில்வே கிராசிங்கை அகற்றி சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதில்  குஜலியம்பாறை அருகே ராமகிரி பிரிவு- உல்லியக்கோட்டை ஆளில்லா கிராசிங்கும்  ஒன்றாகும். இங்கு சுரங்கபாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதை மிகவும் பள்ளமாக  இருந்தது. இதனால் மழைக்காலங்களில் பாலத்தின் கீழ் மழைநீர் குளம்போல் தேங்கி  வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரையடுத்து  ரயில்வே துறையினர் மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்கப்பாதையின் மேல்பகுதி  முழுவதும் ஆஸ்பெட்டாஸ் சீட் அமைக்க முடிவு செய்தனர்.

அதன்படி முதற்கட்டமாக  ஆஸ்பெட்டாஸ் சீட் அமைக்க இரும்பு கம்பிகளை பொருத்தினர். இது அமைத்து 2  மாதங்களுக்கு மேலாகி விட்டது. அதன்பின் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை.  இதனால் மழை நாட்களில் சுரங்கப்பாலம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்குவது  தொடர்கதையாக உள்ளது. எனவே ரயில்வே துறையினர் கிடப்பில் போடப்பட்ட  ஆஸ்பெட்டாஸ் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: