பூதப்பாண்டி: குமரி மாவட்ட மலை பகுதியில் காட்டுத்தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகின.குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கீரிப்பாறை, காளிகேசம், புதுகுளம் உட்பட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்களும், தனியார் கிராம்பு, நல்ல மிளகு தோட்டங்களும் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கீரிப்பாறையில் திடீரென காட்டு தீ பரவியது. தீயில் ரப்பர் தோட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் கருகின. மேலும் விலை உயர்ந்த தேக்கு போன்ற மரங்களும் நாசமாயின.இதுகுறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தும் ரப்பர் தோட்டங்களில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க யாரும் முன்வரவில்லை. இதற்கு தீ விபத்து நடக்கும் பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல வசதி இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இதனால் மலை கிராம மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் தீ விபத்து நடந்த பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததால் நேற்று காலை தீ தானாகவே அணைந்தது. கீரிப்பாறை ரப்பர் தோட்டங்களில் காட்டுத்தீ பரவியதால் ரப்பர் பால் வெட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை ெதரிவித்தனர்.