இரட்டை ரயில்பாதை பணிக்காக நாகர்கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் 60 வீடுகள் இடிப்பு : பெண்கள், குழந்தைகள் கதறல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் இரட்டை ரயில் பாதைக்காக பறக்கின்கால் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிகள் இன்று காலை தொடங்கின. நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியில் உள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஆண்டாண்டு காலமாக நாங்கள் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். எனவே எங்கள் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது என கோரிக்கை மனு அளித்தனர். திருவனந்தபுரம் சென்று ரயில்வே உதவி கோட்ட ேமலாளரையும் சந்தித்து மனு அளித்திருந்தனர். இங்குள்ளவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சுகிராமம் அருகே மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே வீடுகளை காலி செய்யுமாறு தொடர்ந்து நோட்டீஸ் வழங்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக நேற்று முன் தினம் இறுதி கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டு, வீடுகள் 22ம் தேதி இடிக்கப்படும் என தேதியும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இந்த பகுதி மக்கள் கலெக்டரை சந்திக்க வந்து இருந்தனர். கலெக்டரை சந்திக்க முடியாமல்  திரும்பினர். இந்த நிலையில் இன்று காலை பறக்கின்கால் பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

கோட்டார் போலீசார், தமிழ்நாடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காலை சுமார் 9 மணியளவில் வீடுகளை இடிப்பதற்கான பணிகள் தொடங்கின. இதை நிறுத்துமாறு அந்த பகுதி பொது மக்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.  அதைத் தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், உங்களுக்கு போதுமான கால அவகாசத்தை அளித்து உள்ளோம். நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றனர். இதையடுத்து வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கியது. அப்போது பெண்கள், குழந்தைகள் கதறி அழுதவாறு தங்களது வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த 1972ம் ஆண்டு தான் ரயில்வே வந்தது. ஆனால் அதற்கு முன்பு இருந்தே,பறக்கின்கால் பகுதியில் பொது மக்கள் குடியிருந்து வருகின்றனர். தற்போது மாற்று இடம் வழங்காமல் 60க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்கிறார்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அடுக்கு மாடி உள்ளதாகவும், அங்கு செல்ல ரூ.78 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர்.ஏழைகளான எங்களிடம் அதற்கான வாய்ப்பு இல்லை. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். மேலும் அங்குள்ள வீடு ஒரு குடும்பம் வசிக்கும் அளவிற்கு இடவசதி இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: