நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு 25ல் இயங்க ஏற்பாடு

நெல்லை: நெல்லையில் அமைந்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு வருகிற 25ம் தேதி முதல் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனையடுத்து 2 நாட்களில் உள்நோயாளிகள் பிரிவும் செயல்படும். நெல்லை, தஞ்சை மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கடந்த டிசம்பர் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் இருந்து திறந்து வைத்தார். ஆயினும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெறாததால் உடனடியாக செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. கட்டிட திறப்பு விழா நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் மருத்துவமனை எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தென்மாவட்ட மக்களிடம் இருந்து வந்தது.

இந்நிலையில் வருகிற 25ம் தேதி முதல் முதற்கட்டமாக புறநோயாளிகள் பிரிவை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பெரும்பாலான பணியாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் நியமன பணிகள் நிறைவுபெற்றுள்ளன. புறநோயாளிகள் பிரிவு திறக்கப்பட்டு அடுத்த ஓரிரு நாளில் இருந்து உள்நோயாளிகள் பிரிவும் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மருத்துவமனையில் நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், இரைப்பை மற்றும் குடலியல் பிரிவுகள், இருதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் 6 துணை மருத்துவ துறைகளான மயக்கவியல், கதிரியக்கவியல், நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், உயர் வேதியியல் உதிரமாற்று மருத்துவத்துறை ஆகிய துறைகளில் சேவைகள் நடக்க உள்ளன.

இத்துறைகள் தற்போதுள்ள அரசு மருத்துவமனையில் இருந்து முழுமையாக இங்கு மாற்றப்பட உள்ளது. இத்துறை சார்ந்த புறநோயாளிகள் மட்டும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகறிது. 50 தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட 330 படுக்கை வசதிகள் உள்நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்நோயாளிகள் பிரிவும் முழுமையாக நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு இந்த சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மிகுந்த பலனைத்தரும். புறநோயாளிகள் பிரிவுக்கு தேவையான, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் தவிர தேவையான உபகரணங்கள் தற்போதுள்ள மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: