மதுரை : மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்கக்கோரி பார்வர்டு பிளாஃக் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மதுரையில் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. கோரிப்பாளையம் பகுதியில் பாதுகாப்புகளை மீறி போராட்டக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதாக நேற்றே தகவல் வெளியானது. இதையடுத்து மதுரையின் முக்கிய பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டக்காரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டானாவில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையின் முக்கிய சாலையில் போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் இன்று காலை வைகை ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோரிப்பாளையத்தில் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. எனினும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி