வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம் 300 காளைகள், 200 வீரர்கள் சாகசம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, மகாராஜபுரத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 200 மாடு பிடி வீரர்கள் ஆர்வத்துடன் காளைகளை அடக்கினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, மகாராஜபுரத்தில் காமாட்சியம்மன் கருப்பசாமி கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஜல்லிக்கட்டை திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா கொடியேற்றி துவக்கி வைத்தார். முன்னதாக சிவகாசி ஆர்டிஓ தினகரன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். காலை 8.40 மணியளவில் ஜல்லிக்கட்டு துவங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

தொடர்ந்து வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, சேதுநாராயணபுரம், கான்சாபுரம், ஆகாசம்பட்டி,

ராமசாமியாபுரம், மகாராஜபுரம் புதுப்பட்டி மற்றும் மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  இதில் 200 மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, குக்கர், டிவி, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் மாரிச்சாமி, மூக்கன், எஸ்ஐக்கள் குமார், செல்லப்பாண்டி மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், நாட்டாமைகள் ராமராஜ், கருப்பையா, ராமர் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: