மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடைதிறப்பு: 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இளம் பெண்கள் தரிசனத்துக்கு வரலாம் என்ற தகவலால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து 2 ஏடிஜிபிக்கள்  தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மாசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை  நடத்தினார். அதன் பிறகு வேறு பூஜைகள் நடக்கவில்லை. இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட பின்னர் வழக்கமான பூஜைகள் தொடங்கும்.இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கினர். அவர்கள் அனைவரும் நிலக்கல்லில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை 10 மணிக்கு பின்னரே பம்பைக்கு செல்ல  அனுமதிக்கப்பட்டனர். பம்பையில் இருந்து மதியத்துக்கு பிறகு தான் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இதற்கிடையே சபரிமலைக்கு மீண்டும் இளம்பெண்கள் வரலாம் என்ற தகவல் பரவி உள்ளது. கடந்த மாதம் சபரிமலை சென்ற பிந்து மற்றும் கனகதுர்கா கடந்த 3 தினங்களுக்கு முன்பு மலப்புரத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,  நாங்கள் மீண்டும் சபரிமலை செல்வோம் என்றனர். இதனால் மாசி மாத பூஜையின் போதும் அவர்கள் சபரிமலை வரலாம் என்ற தகவல் பரவியது.

இதையடுத்து மீண்டும் சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஏடிஜிபிக்கள் அனில்காந்த், அனந்தகிருஷ்ணன் ஆகியோரது மேற்பார்வையில், 3 எஸ்பிக்கள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார்  குவிக்கப்பட்டு உள்ளனர். சன்னிதானத்தில் எஸ்.பி. அஜித், டி.எஸ்.பி.க்கள் பிரதாபன், பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.இதே போல் பம்பையில் எஸ்.பி. மஞ்சுநாத், டி.எஸ்.பி.க்கள் ஹரிகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையிலும், நிலக்கல்லில் எஸ்.பி. மது, டி.எஸ்.பி.க்கள் சஜீவன், ஜெபகர் ஜெனார்த் ஆகியோர் தலைமையிலும் போலீசார்  தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: