அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 5 குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடம் காலி: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் சிக்கல்

ஆவடி: சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது. மேலும், 5 காவல் நிலையங்களில் குற்றப்பிரிவு  இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் அம்பத்தூர், அம்பத்தூர்  தொழிற்பேட்டை, கொரட்டூர், திருமுல்லைவாயல், ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர், பூந்தமல்லி, நசரத்பேட்டை, குன்றத்தூர், எஸ்.ஆர்.எம்.சி, திருவேற்காடு, மாங்காடு ஆகிய 15 காவல்  நிலையங்கள் உள்ளன. மேலும், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலையங்கள் அனைத்தும் ஒரு போலீஸ் துணை கமிஷனர்  கட்டுப்பாட்டில் உள்ளன. அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, எஸ்.ஆர்.எம்.சி ஆகிய இடங்களில் 5 போலீஸ் உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு காவல் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேற்கண்ட காவல்  நிலையங்களில் சுமார் 950க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வந்தனர். நாளடைவில் பணி ஓய்வு, இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளால் காவலர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதோடு மட்டுமல்லாமல், காவல்  நிலையங்களில் தற்போது உள்ள காவலர்களில் பலர் இணை, துணை, உதவி கமிஷனர்கள் அலுவலகங்கள், அதிகாரிகளின் வாகனங்களில் டிரைவர்கள், நீதிமன்றம், எழுத்தர், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் உள்ளனர்.

சிலர் உடல் நலக்குறைவு, மன உளைச்சல், குடும்ப சூழல் ஆகியவற்றாலும் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால், காவல் நிலையங்களில் குறைவான போலீசாரே பணியாற்றுகின்றனர். இதன் காரணமாக ரோந்து  பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மேலும், பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. போலீசார் பற்றாக்குறையால் காவல்  நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள உதவி மையங்கள் (போலீஸ் பூத்) பூட்டியே கிடக்கிறது. அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி டேங்க் பேக்டரி, பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு ஆகிய காவல்  நிலையங்களின் பரப்பளவு பெரியதாகும். இந்த காவல் நிலையங்களின் பரப்பளவு 5 முதல் 7 சதுர கி.மீட்டர் கொண்டவையாகும். மேற்கண்ட காவல் நிலையப் பகுதிகளில் பரப்பளவு பெரிதாக இருப்பதால் போலீசார் ரோந்து  பணிகளை சரிவர ஆற்ற முடியவில்லை. இதனால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.மேலும், ஆவடி டேங்க் பேக்டரி, முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம், குன்றத்தூர், நசரத்பேட்டை ஆகிய 5 காவல் நிலையங்களில்  குற்றப் பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் கிடையாது. இதனால் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தான் குற்றப் பிரிவை சேர்ந்து பார்க்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் சட்டம் - ஒழுங்கிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘முதல்வர், துணை முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள், சட்டசபை நிகழ்ச்சி, அரசியல் கட்சி கூட்டங்கள், பல்வேறு வகையான போராட்டங்கள், மெரினா கடற்கரை  உள்ளிட்டவைகளுக்கு பாதுகாப்பு பணிகளுக்கான சென்னை புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து போலீசாரை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட நிகழ்வுகளுக்கு என்று தனியாக  போலீஸ்அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்களை தடுக்க முடியும்,’’ என்றனர்.

பணிச்சுமையால் அவதி

காவல் நிலையங்களில் ரோந்து போலீசாருக்கு உறுதுணையாக ஊர்க்காவல் படையினர் மாதத்திற்கு 15 முதல் 20 நாட்கள் வரை வேலை செய்து வந்தனர். அவர்களின் உதவியால் ரோந்து பணிகளை போலீசார் சிறப்பாக செய்து  வந்தனர். தற்போது கடந்த ஒரு ஆண்டாக ஊர்க்காவல் படையினரின் பணி மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் என அரசு உத்தரவு வந்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஊதியம் குறைந்ததால் அந்த 5 நாட்கள் கூட ஒழுங்காக வருவது  இல்லை. இதோடு மட்டுமல்லாமல், போலீஸ் நண்பர்களும் போலீசாருக்கு பல்வேறு வகையில் துணையாக இருந்தனர். அவர்களில் சிலர் குற்றவாளிக்கு போலீஸ் நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறி வந்தனர். இதனால்  அவர்களையும் போலீசார் பணியில் அமர்த்தி வேலை வாங்குவது இல்லை. இதனாலும் போலீசாருக்கு கூடுதல் பணி சுமை ஏற்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: