தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணை

டெல்லி : தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய  வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் அடுத்த 4 வாரத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான தலைமை செயலாளரின் அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

லோக் ஆயுக்தா சட்டம் 2014

மாநிலங்களில் அரத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ கடந்த 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, 2014 ஜனவரி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, நாட்டிலேயே முதன் முதலில் மகாராஷ்ராவில் தான் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 15 மாநிலங்களில் இந்த அமைப்பு  செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி எந்தவொரு தனி மனிதரும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடுக்க முடியும், இதன் விசாரணையில் அரசு அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ முறைகேடு, ஊழல் செய்தது கண்டறியப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல் ஆகிய வகைகளில் தண்டிக்கப்படுவார்கள்.

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்

இந்நிலையில், தமிழகம், புதுவை, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட  மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இதேபோல் தமிழ் நாட்டில் இருந்து, திருச்சியைச்சேர்ந்த சமூக சேவகர் குருநாதன் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா கடந்த ஜூலை 10ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுக்கு 2 முறை கால அவகாசம்

இது தொடர்பான பிரமாண பத்திரத்தை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதகால அவகாசம் கேட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்தில் எந்த தாமதமும் இல்லாமல் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் 2 மாத காலத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் மேற்படி வழக்கின் அடுத்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் வந்த போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கினர். அத்துடன், தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தேடுதல் குழுவை நியமித்தது தமிழக அரசு

இந்நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த மூவர் தேர்வுக்குழுவானது, தகுதிவாய்ந்த நபர்களை பரிந்துரை செய்வதற்காக சர்ச் கமிட்டி எனப்படும் தேடுதல் குழுவை நியமித்தது.  நியமிக்கப்பட்ட தேடுதல் குழுவானது தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, தேர்வுக் குழுவிடம் வழங்கும்.

பின்னர் தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.இதையடுத்து  லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டார். மேலும் தேடுதல் குழு உறுப்பினர்களாக அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாரி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

12 வார கால அவகாசம்

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, தமிழக தலைமை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில்,லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டும் தாமதம் ஆகிக் கொண்டு இருக்கிறது, அந்த பணியும் விரைவில் முடிந்து விடும். எனவே 8 வார கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. இதனை ஏற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார். மேலும் அடுத்த 4 வாரத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: