தேர்தல் வருவதால் வந்தீங்களா... அதிமுக எம்பியை எதிர்த்து பேசிய விவசாயி மீது போலீஸ் வழக்கு

ஒரத்தநாடு: படத்திறப்பு விழாவுக்கு வந்த  தஞ்சை அதிமுக எம்.பி.யிடம், கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது வராமல் தேர்தல் வருவதால் இப்போது வந்தீங்களா என்று கேட்ட விவசாயி மீது ேபாலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அதிமுக பிரமுகர். இவரது தந்தை  துரைசாமி, சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இதையொட்டி ராமசாமி வீட்டில் படத்திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. படத்தை திறந்து வைப்பதற்காக தஞ்சை அதிமுக எம்பி பரசுராமன் காரில் வந்து இறங்கினார். அப்போது ராமசாமி வீடு அருகே புலவன்காட்டை சேர்ந்த விவசாயி சக்திவேல் (40) நின்று கொண்டிருந்தார். எம்பி பரசுராமன், காரை விட்டு இறங்கி   ராமசாமி வீட்டுக்குள் நுழையும்போது அவரை நிறுத்தி ‘‘கஜா புயல் தாக்கியதில் 2 மாதமாக நிர்க்கதியாக இருந்தோம். சோற்றுக்கு பிச்சை எடுத்தோம்.

அப்போதெல்லாம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்போது இங்கே ஏன் வருகிறீர்கள்,  தேர்தல் வருவதால் வருகிறீங்களா? இங்கே வரக்கூடாது என்று சக்திவேல் பேசினார். இதை எதிர்பாராத பரசுராமன் நிலைகுலைந்து போனார்.அப்போது எம்பி பரசுராம னுடன் வந்திருந்த அதிமுகவினர், சக்திவேலை அங்கிருந்து  தள்ளி கொண்டு போய்விட்டனர். பின்னர் பரசுராமன் படத்திறப்பு விழாவை முடித்து கொண்டு அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார். இதைதொடர்ந்து பாப்பாநாடு போலீசில் சக்திவேல் மீது ராமசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: