7 அடி உயர சுவாமி சிலை பிரதிஷ்டை : குமரியில் வெங்கடாஜலபதி கோயில் நாளை மகா கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 7 அடி உயர வெங்கடாஜலபதி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் ₹22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வெங்கடாஜலபதி சுவாமி  சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி போன்றவை அமைந்துள்ளன.

கோயிலின் கீழ்பகுதியில் சீனிவாச கல்யாண மண்டபம், அன்னதான கூடம், தியான மண்டபம் போன்றவை கட்டப்பட்டு உள்ளது. கோயிலில் நாளை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஜலாதி வாஸம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் 7 அடி உயர வெங்கடாஜலபதி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 3 அடி உயர பத்மாவதி தாயார் சிலை, 3 அடி உயர ஆண்டாள் சிலை மற்றும் 3 அடி உயர கருடபகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று (சனி) காலை 9 மணி முதல் 12 மணி வரை கலசாஸ்னர்ப்பணம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மகாசாந்தி, திருமஞ்சனம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்குள் கொடியிறக்கம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: