தேன்கனிக்கோட்டை வனத்தில் இருந்து ஜவளகிரி காட்டில் 60 யானைகள் தஞ்சம்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே முகாமிட்டிருந்த 60 யானைகளை கொட்டும் பனியில் ஜவளகிரி வனப்பகுதிக்கு, வனத்துறையினர் விரட்டியடித்தனர். அங்கிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் பல பிரிவுகளாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு, நொகனூர், தாவரகரை, ஆலல்லி, பேவநத்தம் வனப்பகுதியில் முகாமிட்டவாறு, அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதில், சானமாவு பகுதியில் முகாமிட்டிருந்த 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு கடந்த வாரம் விரட்டப்பட்டன. இதையடுத்து, யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ஆனால், குட்டிகளுடன் 60 யானைகளும் தாவரகரை வனப்பகுதியில் முகாமிட்டு கடந்த ஒரு வாரமாக தாவரகரை, கண்டகானப்பள்ளி, ஒசட்டி, கேரட்டி, மலசோனை ஆகிய கிராமங்களில் பயிர்களை நாசம் செய்து வந்தன. யானைகளை விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் காலை, இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் யானைகளை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டு, விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனச்சகரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் விடாமுயற்சி செய்து, நேற்று முன்தினம் இரவு கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டி சென்றனர்.

இதில், ஓட்டம் பிடித்த யானைகள் அகலக்கோட்டை வனப்பகுதி வழியாக நேற்று காலை 7 மணியளவில் ஜவளகிரி காட்டுப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளன. அங்கிருந்து மீண்டும் திரும்பி வராமல் தடுக்க வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் நொகனூர், பேவநத்தம், சானமாவு வனப்பகுதியில் உள்ள யானை கூட்டமும் விரட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 60 யானைகள் கொண்ட மெகா கூட்டம், ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். ஓசூரில் 4 யானைகள் தொடர் அட்டகாசம்: ஓசூர் அருகே சானமாவு, போடூர், பேரண்டப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு பேரண்டப்பள்ளி காட்டில் இருந்து வெளியே வந்த யானைகள், அருகில் உள்ள அம்லட்டி, திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன.

பின்னர், அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுய்து பயிர்களை துவம்சம் செய்தன. இதில், சுமார் 8 ஏக்கரில் தக்காளி, கோஸ், வாழை, அவரை, தென்னை நாசமானது. பொழுது புலர்ந்ததும் வந்த வழியாக மீண்டும் காட்டிற்குள் ஓட்டம் பிடித்தன. இதையடுத்து, நேற்று காலை விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு சென்றபோது, யானைகளின் அட்டகாசத்தை கண்டு கண்ணீர் வடித்தனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் காடுகளில் சுமார் ஒரு மாதமாக யானைகள் முகாமிட்டுள்ளன. அவை விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும், மீண்டும் திரும்ப வந்து விடுகின்றன. நிரந்தரமாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரண உதவி கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: