பாஜவுக்கு எதிராக பேசும் தம்பித்துரைக்கு ‘செக்’ அதிமுக தொகுதி பங்கீட்டு குழு அமைப்பு: தேர்தல் பிரசாரம், அறிக்கை தயாரிக்கவும் தனி குழு

சென்ைன: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் பாஜ கூட்டணிக்கு எதிராக கடந்த சில நாட்களாக பேசி வரும் தம்பித்துரை சேர்க்கப்படவில்லை. ஆனால் தேர்தல் பிரசார குழுவில் அவர் சேர்க்கப்ப்பட்டுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் இரா.விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, பி.எச்.மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்பி ரபி பெர்னார்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளவர்களை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து, பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பித்துரை, அமைப்புச் செயலாளர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், இலக்கிய அணி செயலாளர் வளர்மதி, அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால், கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளன. இந்த தேர்தலில், அதிமுகவும், பாஜவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பாஜவின் சொல்படிதான் அதிமுக நடப்பதாக அக்கட்சியின் தொண்டர்களே குற்றம்சாட்டி வந்தனர்.இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பாஜவுக்கு எதிராக மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பாஜவும் பதிலடி கொடுத்து வருகிறது. அதோடு, கூட்டணி குறித்து பேச தம்பித்துரை யார் என்றும் பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். அதற்கு தம்பித்துரையும் பாஜவை நாங்கள் தோளில் தூக்கி சுமக்க விரும்பவில்லை. என் கட்சியின் கருத்தை நான் சொல்கிறேன். நான் ஒன்றும் பாஜவின் கருத்தை சொல்லவில்லை என்று பதிலடி ெகாடுத்தார். இதனால் நாளுக்கு நாள் தம்பித்துரைக்கும், பாஜ தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.இந்தநிலையில், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழுவில் சீனியரான தம்பித்துரை கழட்டி விடப்பட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தை ஒருங்கிணைக்கும் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கொள்கை பரப்புச் செயலாளர், அதனால்தான் பிரசார ஒருங்கிணைப்புக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால், கட்சியின் மூத்த தலைவர், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தவர், மத்திய அமைச்சருக்கு இணையான மக்களவை துணை சபாநாயகர் பதவியில் உள்ளார். இதனால் அவர் கூட்டணி குறித்து முடிவு செய்யும் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக பாஜவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து வருவதால், தொகுதி பங்கீட்டு குழுவில் அவரை சேர்த்தால் பிரச்னை ஏற்படும் என்பதற்காகத்தான் அவர் கழட்டி விடப்பட்டுள்ளார் என்று பாஜவுக்கு எதிரான அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: