மாதவரம், மடிப்பாக்கத்தில் துணிகரம் ராணுவ அதிகாரி, எஸ்.ஐ வீட்டில் 75 சவரன் நகை, கார் கொள்ளை

சென்னை: மாதவரம் பால்பண்ணை சி.கே.எம் நகரை சேர்ந்தவர் விஜயன் (62), ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரளா (57). சென்னையில் போலீஸ் எஸ்.ஐ.யாக வேலை செய்து விருப்ப ஓய்வு பெற்றவர். கடந்த வாரம் விஜயன் குடும்பத்துடன் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். தகவலறிந்து விஜயனும் சென்னை வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ சாவியை எடுத்து திறந்து அதில் இருந்த 50 சவரன் நகைகள், 10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. வீட்டில் இருந்த சாவியை எடுத்து வாசலில் நிறுத்தி வைத்திருந்த விஜயனின் காரையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விருப்ப ஓய்வு பெற்ற பெண் எஸ்.ஐ.,யின் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆலந்தூர்: மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் மாணிக்க  வாசகம் (68). ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், தனது  குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு  திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே  சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 25 பவுன் தங்க  நகைகள், 6,200 அமெரிக்க டாலர்கள், 20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில், மடிப்பாக்கம் போலீசார்  விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: