ஈரோடு: காலிங்கராயன் கால்வாய் அர்ப்பணிக்கப்பட்டு 737 ஆண்டுகளாகிறது. இதையொட்டி நாளை (19ம் தேதி) 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழா நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர்பாசனமாக விளங்கி வரும் காலிங்கராயன் வாய்க்கால், லிங்கையன் என்கிற காலிங்கராயன் என்பவரால் வெட்டப்பட்டது. இந்த வாய்க்காலில் செல்லும் பாசன தண்ணீர் மூலமாக ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்ய முடியும். 10 மாதம் தொடர்ந்து தண்ணீர் செல்லும் இந்த வாய்க்கால் முற்றிலும் மண்ணால் கட்டப்பட்டது ஆகும். பவானி ஆற்றில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த வாய்க்காலில் உள்ள 786 மதகுகள் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. நெல், வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றது.
பவானி ஆறு மற்றும் நொய்யல் ஆற்றை இணைக்கும் வகையில் வெட்டப்பட்ட இந்த கால்வாயில் எந்த பகுதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் தண்ணீர் செல்லும் வகையில் வெட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் நொய்யல் ஆற்றினையும், அமராவதி ஆற்றினையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததால் நதிகள் இணைப்பிற்கு 737 ஆண்டுகளுக்கு முன்பே அச்சாரம் போடப்பட்டதாக கருதப்படுகின்றது. காலிங்கராயன் வாய்க்கால் வெட்டப்பட்டு பாசனத்திற்கு அர்பணிக்கப்பட்டு 737 ஆண்டுகளாவதை முன்னிட்டு நாளை 19ம் தேதி (தை மாதம் 5ம் தேதி) ஈரோடு அடுத்துள்ள வெள்ளோட்டில் அமைந்துள்ள காலிங்கராயன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபடுகின்றது. முன்னதாக பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் காலை 8 மணிக்கு விழா தொடங்கி சாத்தம்பூர், சாவடிப்பாயைம் புதூர், பஞ்சலிங்கபுரம், கணபதிபாளையம் நால்ரோடு, கொளாநல்லி, தாமரைப்பாளையம், ஆவுடையார்பாறை உள்ளிட்ட 15 கிராமங்களில் விழா நடைபெற உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி