ஊட்டி : ஊட்டி காமராஜர் சாகர் அணை பகுதியில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அதிகளவு காணப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா பகுதிக்கு அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது.
இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட இதர குப்பைகளை போன்றவற்றை பயன்படுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளுக்குள் வீசி செல்கின்றனர்.
இதனால் இந்த வனப்பகுதிகளுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு காணப்படுகின்றன. இதேபோல் ஊட்டி – கூடலூர் சாலையில் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் அமர்ந்து உணவு உட்கொள்கின்றனர். பின்னர் மீதமான உணவுகள் மற்றும் குப்பைகளை சாலை ஓரங்களில் வீசி செல்கின்றனர். இதனால், இந்த சாலையில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
மேலும், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வனப்பகுதிகளுக்குள் செல்வதால் வன விலங்குகள் சாலை ஓரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை திண்று இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அணை நீரில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன.
மக்காத பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் சாலையில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
