ரஞ்சி கோப்பையில் முதல்முறையாக அரை இறுதியில் கேரளா

வயநாடு: ரஞ்சி கோப்பை தொடரின் கால் இறுதியில் குஜராத்தை 113 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய கேரள அணி அரை இறுதிக்கு முதல்முறையாக முன்னேறி சாதனை படைத்தது.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதிப் போட்டிகள் நடந்து வருகின்றன. வயநாட்டில் நடந்த கால் இறுதியில் கேரளா, குஜராத் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கேரளா 185, குஜராத் 162 ரன்கள் எடுத்தன. 2வது  இன்னிங்சில் கேரளா 171 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் அணிக்கு 195 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில், எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணிக்கு கேரள பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி தந்தனர். கலாரியா, அக்சர் படேல் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட் வீழ்த்த,  குஜராத் அணி 2வது இன்னிங்சில் வெறும் 81 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் கேரளா 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. ரஞ்சி வரலாற்றில் கேரள அணி அரைஇறுதிக்கு  முன்னேறியது இதுவே முதல் முறை.

லக்னோவில் நடந்த மற்றொரு கால் இறுதியில், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேச அணி தனது 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களுடன் உள்ளது. முதல் இன்னிங்சில் உபி 385,  சவுராஷ்டிரா 208 ரன் எடுத்தன. உ.பி அணி கைவசம் 2 விக்கெட் இருக்க, 349 ரன் முன்னிலையுடன் உள்ளது. 4ம் நாள் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.நாக்பூரில் நடந்த கால் இறுதியில், நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 559 ரன்களுடன் உள்ளது. மூத்த வீரர் வாசிம் ஜாபர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 206  ரன்னில் (296 பந்து) ஆட்டமிழந்தார். பிஆர் சஞ்சய் 141, வடேகர் 98 ரன் எடுத்தனர். முன்னதாக, உத்தரகாண்ட் முதல் இன்னிங்சில் 355 ரன் சேர்த்தது. விதர்பா அணிக்கு கைவசம் 4 விக்கெட் உள்ள நிலையில் 204 ரன்கள்  முன்னிலையுடன் வலுவாக உள்ளது.

பெங்களூருவில் நடந்த கால் இறுதியில், கர்நாடகா-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் ராஜஸ்தான் 224 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கர்நாடகா அணி 166 ரன்னில் 9 விக்கெட் இழந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு வினய் குமார்-ஆர்.ஜி.மோரி ஜோடி 100 சேர்த்து, அணியை முன்னிலை பெறச் செய்தது. வினய் குமார் ஆட்டமிழக்காமல் 83  ரன் சேர்த்தார். மோரி 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் கர்நாடகா முதல் இன்னிங்சில் 263 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 2வது இன்னிங்சில் 222 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் கர்நாடகா 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த  அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களுடன் தடுமாறுகிறது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: