மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் : 14 அப்பாவி மக்கள் பலி: ஏராளமானோர் காயம்

ைநரோபி: மும்பையில் நடத்தப்பட்டது போல், கென்யாவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். 700 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றன.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு, பாகிஸ்தான் தீவிரவாதிகள், ரயில் நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள் போன்ற இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 164 பேர் கொல்லப்பட்டனர். இதேபோன்ற தாக்குதலை கென்யாவில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்தினர்.

Advertising
Advertising

கென்யா தலைநகர் நைரோபியில் ‘டஸ்சிட் டி2’ என்ற நட்சத்திர ஒட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் 101 தங்கும் அறைகள், உணவு விடுதி, நீச்சல் குளங்கள் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. நேற்று முன்தினம் மாலை ஓட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினான்.. இதில் அங்கிருந்த வாகனங்கள் வெடித்து சிதறின. இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஓட்டலுக்கு வந்திருந்த மக்கள், உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி பதுங்கினர். அதே நேரம், துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சில தீவிரவாதிகள் ஓட்டலுக்குள் நுழைந்தனர். ஆளுக்கொரு பக்கமாக சென்ற அவர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். அங்கிருந்த மக்கள் சிதறி ஓடினார்கள். பாதுகாப்பு படைகள் வருவதற்குள், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 14 அப்பாவி மக்கள் பலியாகினர்.  மேலும், பலர் காயமடைந்தனர்.

பாதுகாப்பு படைகள் வந்ததும், ஓட்டலை சுற்றி வளைத்தன. அதற்குள் ஓட்டல் அறைகளுக்குள் சென்ற பதுங்கிய தீவிரவாதிகள் அங்கிருந்து தாக்குதல் நடத்தினர். பின்னர், சிறிது நேரம் அமைதி காத்தனர். அந்த நேரத்தில் ஓட்டல் அறைகளிலும், பல்வேறு பகுதிகளிலும் பதுங்கியிருந்த 700 பேரை பாதுகாப்பு படைகள் பத்திரமாக வெளியேற்றின. நள்ளிரவு 2 மணிக்கு பின்னர் தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. ஓட்டல் வளாகத்தை பாதுகாப்பு படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், 20 மணி நேர சண்டைக்குப் பிறகு ஓட்டலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக கென்ய அதிபர் உகுரு கென்யட்டா, தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

குறிவைப்பது ஏன்?

சோமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு உதவி செய்வதற்காக கென்யா தனது ராணுவத்தை கடந்த 2011ல் அங்கு அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கவே, கென்யா மீது அல்சகாப் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2013ம் ஆண்டும், இதேபோல் ஓட்டலில் புகுந்த தீவிரவாதிகள், 67 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அல்சகாப்’ பொறுப்பேற்பு

இந்த தாக்குதலுக்கு சோமாலியாவை சேர்ந்த ‘அல்சகாப்’ என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது, அல் கய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்தது. ஓட்டலுக்குள் எத்தனை தீவிரவாதிகள் நுழைந்தனர், அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவல் உறுதியாக கூறப்படவில்லை. ஓட்டலுக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராவில், இரண்டு தீவிரவாதிகள்  பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும், ஓட்டலுக்கு வெளியே வாகனங்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தியவனும் இந்த கும்பலை சேர்ந்தவன்தான் என்பது உறுதியாகி இருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: