கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது அறிவியல் பூர்வமான சான்று: சேலம் சரக டி.ஐ.ஜி செந்தில்குமார்

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சாலை விபத்தில் உயிரிழந்தார் என்பது அறிவியல் பூர்வமான சான்றுகளின் மூலம்  உறுதிப்படுத்தப்பட்ட முடிவு என சேலம் சரக டி.ஐ.ஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் புதிதாக சந்தேகம் தெரிவிக்கும் கனகராஜின் சகோதரர் தனபால், அதுகுறித்து காவல் நிலையத்தில் ஏதும் புகார் அளிக்கவில்லை என்றும் டி.ஐ.ஜி செந்தில்குமார் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி செந்தில்குமார், ஆத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-சென்னை பைபாஸ் சந்தனகிரி பிரிவில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில் கனகராஜ் வாகன விபத்துக்குள்ளாகி இறந்தார் என தெரிவித்தார்.

இறந்துபோன கனகராஜின் அண்ணன் தனபால் அளித்த எழுத்து மூலமான புகாரின்பேரில் ஆத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போது புகார்தாரர் தனபால் விபத்து குறித்து காவல்துறை சரியாக விசாரணை செய்யாதது போல சந்தேகங்கள் எழுப்பி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளதால், அதுகுறித்து விளக்கம் அளிப்பது தங்கள் கடமை என்றும் டி.ஐ.ஜி. செந்தில் குமார் குறிப்பிட்டார். மேலும் சம்பவம் நடந்த அடுத்த நாள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சாலை விபத்தால்தான் தன் தம்பி இறந்தார் என்பதே உண்மை என்று புகார்தாரர் தனபால் தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்ட டி.ஐ.ஜி. செந்தில்குமார், அதற்கான வீடியோ பதிவையும் வெளியிட்டார்.

முதலில் சந்தேகம் இல்லை என்று பேட்டியளித்தாலும், பின்னர் சந்தேகம் இருப்பதாக தனபால் பேட்டியளித்ததாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, அதுகுறித்து ஏன் தனபால் இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று செந்தில்குமார் வினவினார். இந்த விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் தனபால், புதிதாக சந்தேகம் தெரிவிப்பது ஏன் எனத் தெரியவில்லை என்று தெரிவித்த டி.ஐ.ஜி. செந்தில்குமார், காவல்துறையைப் பொறுத்தவரை முறையாகப் புலன் விசாரணை செய்து, விபத்தால்தான் மரணம் ஏற்பட்டது என்பதை அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தியிருப்பதாகக் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: