சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஒப்புதல் : பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கை என விளக்கம்!

ஜெருசலேம் : சிரியா மீது வான்வழி தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு டிச., மாதத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஐ.நா., உத்தரவின்படி போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தின. சரமாரியாக ஏவுகணைகளை வீசியதில் விமான நிலையத்தின் அருகில் இருந்த மிகப்பெரிய ராணுவ கிடங்கு அடியோடு நாசமானது.

மேலும் அப்பகுதியில் இருந்த பல கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின. அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சிரியா மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஈரான் ஆதவுடன் செயல்படும் இஸ்புல்லா பயங்கரவாதிகளை ஒடுக்கும் பொருட்டே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. மேலும் நாடு கடந்து செல்ல வசதியாக இஸ்புல்லா பயங்கரவாதிகள் தோண்டியிருந்த சுரங்கங்களையும்,  ஈரான் அளித்த ஆயுதங்களையும் அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. சிரியாவில் இருந்து தங்கள் நாட்டை தாக்க வந்த ஏவுகணைகளை டமாஸ்கஸ் அருகே நாங்கள் வழிமறித்து சுட்டு வீழ்த்தினோம் என இஸ்ரேல் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: