கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் முதல்வர் பதவியில் இருந்து விலகி உண்மையை நிரூபிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமிக்கு முத்தரசன் அறிவுரை

வேலூர்: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் பதவியில் இருந்து விலகி உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வருக்கு முத்தரசன் அறிவுறுத்தி உள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வேலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கொடநாடு விவகாரம் கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடந்த சம்பவங்கள் ₹2 ஆயிரம் கோடி ஆவணங்களை கைப்பற்றுவதற்கான முயற்சியாகவே கருதப்படுகிறது. அதற்காக,  டிரைவர் கனகராஜ் மூலம் திட்டத்தை நிறைவேற்ற ₹5 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இதற்கு  பின்னணியில் இருந்தார் என்பதுதான் பிரச்னை. அவர் எனக்கு அதில் சம்பந்தமில்லை என்று கூறியதோடு, அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுகிறார். இது அவருக்கு மிகப்பெரிய களங்கம்.  எனவே முதல்வர் தனது பதவியில் இருந்து விலகி உண்மையை நிரூபிக்க வேண்டும்.  இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் அல்லது உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானே எடுக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பில் காவிரி பிரச்னையில் மத்திய அரசு தலையிடக்கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத்தான் அனைத்து பொறுப்பும் உள்ளதாக தெரிவித்துள்ளது.   ஆனால், மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் இழைத்த மிகப்பெரிய துரோகம். இதற்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து கட்சிகள்,  அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். மேகதாது விவகாரத்தில் ‘பெங்களூருவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிழைப்பு நடத்த முடியாது’ என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருப்பது பிரச்னையை கிளப்புவதாக உள்ளது. இவ்வாறு அவர்  கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: