கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்.!!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை பிரசாரம் செய்கிறார். இதற்காக, மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு தனி விமானம் மூலம் இன்று இரவு 8.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் வந்தார். மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை, மாலை அணிவித்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக மீனாட்சியம்மன் அம்மன் கோயிலுக்கு பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி வந்து சுவாமி தரிசனம் செய்தார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி வேஷ்டி சட்டை அணிந்திருந்த நிலையில் இன்று மீண்டும் வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி வருகை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் பிரதமர் மோடி நாளை காலை 11 மணயளவில் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்குப்பின் பிரதமர் மோடி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் மாலை 3.30க்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்….

The post கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேஷ்டி சட்டையுடன் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்.!!! appeared first on Dinakaran.

Related Stories: