ஸ்டிரைக் காரணமாக ஜனவரி 23ம் தேதி முதல் கோயில் பிரசாத விற்பனை நிறுத்தம்: திருக்கோயில் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தகவல்

சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஜனவரி 23ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கோயில் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், பக்தர்களுக்கு ஜன.23ம் தேதி முதல் பிரசாதம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இதில், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், உதவியாளர், மேலாளர், அர்ச்சனை சீட்டு வழங்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், 7வது ஊதிய குழு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவு படி பணிக்கொடை வழங்க வேண்டும், தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ₹50 லட்சத்துக்கும் மேல் வருமானம் வரும் கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதற்கேற்றாற் போல் சம்பளம் நிர்ணயம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஜூன் 27ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து அப்போதைய கமிஷனர் ஜெயா திருக்கோயில் பணியாளர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வரை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அறநிலையத்துறை கமிஷனர் டி.கே.ராமச்சந்திரனை திருக்கோயில் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை அளித்தனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:திருக்கோயில் பணியாளர்களின் 25 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் கோயில் பணியாளர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட ஆயத்தம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஜனவரி 3ம் தேதி மீண்டும் ஆணையரை சந்தித்து எங்களது கோரிக்கைளை நிறைவேற்ற கோரிய போது, விரைவில் நிறைவேற்றுவதாக ஆணையர் தெரிவித்துள்ளபடி, கடந்த ஜனவரி 11ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி உத்தரவு வழங்காவிட்டால் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளிருப்பு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஜனவரி 23ம் தேதி முதல் அனைத்து அனைத்து திருக்கோயில்களிலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, கோயில்களில் பிரசாதம் வழங்குவது, மதியம் அன்னதானம் வழங்குவது உள்ளிட்டப்பணிகள் நடக்காது என்று திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: