மக்களவையில் அதிமுக எம்.பி.க்களை அனுமதிக்க தம்பிதுரை கோரிக்கை; நிராகரித்த சுமித்ரா மகாஜன்

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் அமளி செய்த அதிமுக எம்பி.க்கள் 24 பேர் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதே கோரிக்கைக்காக மக்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அதிமுக எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. அன்று முதல் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதிமுக எம்பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டு அமளி செய்து வந்தனர்.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பி.க்கள் 24 பேரை, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தார். அதேபோல், மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 7 பேரும் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிமுக எம்பி.க்கள் அருண்மொழித் தேவன், கோபால கிருஷ்ணன், பன்னீர் செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 பேரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்களை மக்களவையில் அனுமதிக்க மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை விடுத்தார்.

சுமித்ரா மகாஜன் மறுப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களை மன்னிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக மக்களவையில் முழக்கமிடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று சுமித்ரா மகாஜன் கேள்வி எழுப்பினார். பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதிமுக நடந்து கொண்டதாகவும், எனினும் தம்பிதுரை கோரிக்கையை பரிசீலிப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பதில் அளித்துள்ளார்.

மத்திய அரசு மீது தம்பிதுரை புகார்

மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு போதுமான நிதி கிடைப்பது இல்லை என்று மக்களவையில் துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை பேசி வருகிறார். மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்க கூடாது என்று கோரிக்கை விடுத்த அவர், ஜிஎஸ்டியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியும் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: