பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலி ஓட்டல்களில் பார்சல் உணவு விலை உயர்வு: பைகளுக்கு என்று ரூ5 வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை எதிரொலியாக ஓட்டல்களில் பார்சல் உணவுகள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, உணவுடன் பைகளுக்கு ரூ.5 கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முதல் உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் உள்ள காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், நீர் நிரப்பப்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக் கொடிகள், மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் காகிதங்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், தெர்மகோல் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள் என்று 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். பிளாஸ்டிக் தடையால் பெருமளவில் பாதிக்கப்படுவது சிறிய மற்றும் பெரிய ஓட்டல்கள் தான்.  ஓட்டல்களில் சாம்பார், சட்னி, சாப்பாடு, இட்லி, தோசை என்ற அனைத்து உணவு பொருட்களும் பிளாஸ்டிக் பைகளை கொண்டு தான் கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் தடையால் ஓட்டல்களில் பார்சல் வாங்குபவர்களுக்கு கேரி பேக் வழங்குவதற்கு பதிலாக துணி பை மாதிரி(நொய்யப்படாத துணி பை) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பை வழங்குவதை ஒட்டி திடீரென ஓட்டல்களில் உணவு கட்டணத்தையும் உயர்த்தி விட்டனர். அதாவது, சாதாரண ஓட்டல்களில் இதுவரை சாப்பாடு ரூ.70 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது பை கட்டணம் என்று சாப்பாட்டின் விலையை ரூ.75 என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்  பை கொண்டு வருபவர்களுக்கும்  ரூ.75க்கு தான் விற்கப்படுகிறது. கேட்டால் சாப்பாடு விலையை உயர்த்தி விட்டதாகவும் கூறி வருகின்றனர். இதனால், மக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். மேலும் பில்களிலேயே இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் சில ஓட்டல்களில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்போது திடீரென உணவின் விலையை உயர்த்தியுள்ளதை எந்த வகையிலும் ஏற்றிக் கொள்ள முடியாது. இது போன்று அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வலுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: