சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் வில்லங்க சான்று பெற கட்டணம் எவ்வளவு? நாளை மறுநாள் ஆன்லைன் மூலம் பெறும் முறை அமலாகிறது

சென்னை: ஆன்லைன் மூலம் பெறப்படும் வில்லங்க சான்றுக்கான கட்டணம் எவ்வளவு என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்த வேண்டும் என்று பதிவுத்துறை தலைமைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிதாக வீடு மனை உள்ளிட்ட அசையா சொத்துகளை வாங்குவோர், விற்போர் அந்த சொத்துகளை முந்தைய விவரங்களை தெரிந்து கொள்ள  வில்லங்கச் சான்றிதழ் பெறுவது அவசியமானது. மேலும் வில்லங்க விபரங்களை பதிவுத்துறை இணைய தளத்தில் இலவசமாக தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது.

ஆனால் வங்கிகள், நீதிமன்றங்களில் நேரடியாக விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்க சான்றிதழ்களே ஏற்கப்படுகின்றன. இந்தநிலையில் பதிவுத்துறை பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நடவடிக்கையை பதிவுத்துறை ஐஜி எடுத்துள்ளார். அதன்படி, ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெறும் திட்டம் ஜனவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டத்தின் படி, இனி வருங்காலங்களில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வர வேண்டாம். மேலும், எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும், ஆன்லைன் மூலம் வில்லங்க சான்று பெற்று கொள்ள முடியும்.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் 1 ஆண்டுக்கு பார்க்க வேண்டுமென்றால் ரூ.131ம், 32 ஆண்டுகளுக்கு ₹440 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக பதிவுத்துறை தலைமை சார்பில் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ஆன்லைனில் பொதுமக்களே நேரடியாக வில்லங்க சான்று பெறுவது என்பது மிகவும் குறைவு தான். அவர்கள் ஆவண எழுத்தரை தான் அணுகி வில்லங்க சான்று பெற விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியிடாததை பயன்படுத்தி கொண்டு தங்களது இஷ்டத்திற்கு தகுந்தாற்போல் ஆவண எழுத்தர்கள் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, வில்லங்க சான்றுக்கான கட்டணம் எவ்வளது என்பது தொடர்பாக பதிவுத்துறை சார்பில், பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்த வேண்டும் என்று பதிவுத்துறை தலைமைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்திரப்பதிவு செய்ய நேர கட்டுப்பாடு

தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் வரிசைப்படி பத்திரம் பதிவு செய்ய வராதவர்களுக்கு தினமும் மாலை 3.30 மணிக்கு மேல் பத்திரம் பதிவு செய்ய வருகின்றனர். அவ்வாறு வருபவர்களால் சார்பதிவாளர்களின் பிற நிர்வாக பணிகளை செய்ய முடிவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவர்களது பணிச்சுமையை குறைக்கும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் மாலை 3.30 மணிக்கு மேல் பத்திரம் பதிவுக்கு ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜன.2 முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலக்களிக்க வேண்டும்

பதிவுத்துறையில் 1 ஆண்டுக்கு வில்லங்க சான்று பெற 30ம், கணினி கட்டணம் ரூ.100ம், மனு ரூ.1 கட்டணம் ரூ.131 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பார்க்க கூடுதலாக ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், கணினி, மனு கட்டணம் கடந்த காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பார்ப்பதால் வசூலிக்கப்பட்டது. தற்போது, பொதுமக்களே கணினி பயன்படுத்துவதால் அந்த கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தேடுதல் கட்டணம் ரூ.30 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: