மோடியை கிண்டலடிக்கும் ராகுல் கேள்வியை போல் பதிலையும் கொஞ்சம் ஆய்வு செய்யுங்கள்

புதுடெல்லி: நடுத்தர வர்க்கத்தினரை பற்றிய தமிழக பாஜ நிர்வாகியின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய பிரதமர் மோடியை ராகுல் காந்தி  டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.பாஜ கட்சியின் தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாஜ நிர்வாகி ஒருவர், ‘‘நடுத்தர வர்க்கத்திடமிருந்து வரி வசூலிப்பதில் தீவிரமாக இருக்கும்  மத்திய அரசு, ஏன் அவர்களின் நலனில் அக்கறை காட்டுவதில்லை?’’ என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளிப்பதை தவிர்த்த பிரதமர் மோடி,  உடனடியாக புதுச்சேரி மாநில நிர்வாகிகளுடனான கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக மீடியாக்களில் செய்தி வெளியாகின.

இதனை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டிவிட்டரில் பிரதமர் மோடியை நேற்று கிண்டலடித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘வணக்கம்  புதுச்சேரி! நடுத்தர வர்க்கத்தினரின் சிரமத்தை பற்றி பிரதமரிடம் கேள்வி கேட்டால், இதுதான் பதில். பத்திரிகையாளர் சந்திப்பை விட்டுத்  தள்ளுங்கள், கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தை கூட பிரதமரால் சரியாக நடத்த முடியவில்லையே!’’ என கூறி உள்ளார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு, கட்சி நிர்வாகிகளின் கேள்விகளை பாஜ ஆய்வு செய்து வடிகட்டுவதாக வந்த தகவலை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள  ராகுல், ‘‘கேள்விகளை ஆய்வு செய்வது நல்ல யோசனைதான். அதே மாதிரி பதிலையும் ஆய்வு செய்தால் நல்லது’’ என்றும் டிவீட் செய்துள்ளார்.பிரதமர் மோடி தனது பதவிக்காலத்தில் ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில்லை என ராகுல் ஏற்கனவே குற்றம்சாட்டி  வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: