லட்சுமிஸ் என்.டி.ஆர் திரைப்படத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து பாடல் வெளியீடு

திருமலை: லட்சுமிஸ் என்.டி.ஆர் திரைப்படத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இதை கண்டித்து அப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது தெலுங்கு தேச எம்எல்ஏ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி. என்.டி.ராமராவ் லட்சுமியை திருமணம் செய்த பிறகு அவருக்கு ஏற்பட்ட இறுதிக்கால  வாழ்க்கையை திரைப்படமாக்க பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சமூக வலைதளமான யுடியூபில் இப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் என்.டி.ராமராவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை துரோகம் செய்ததாகவும் அவரை தனிமைப்படுத்தி, சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றி, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி இறுதி வாழ்க்கையை கடும் துன்பத்திற்கு தள்ளியதாக சந்திரபாபு நாயுடுவை வில்லனாக சித்தரித்து சகுனியாக பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நேற்று என்.டி.ராமராவ் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா நடித்து தயாரிக்கக்கூடிய என்.டி.ஆர் வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் வெளியீடு பிரமாண்டமாக நடைபெற்றது. விழா முடிந்த சில மணி நேரத்திலேயே ராம்கோபால் வர்மா  இயக்கக்கூடிய லட்சுமிஸ் என்டிஆர் படத்திற்கான பாடல் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில்  வேகமாக பரவி வருகிறது. இதனால் ராம்கோபால் வர்மா மீது கர்னூலை  சேர்ந்த எம்எல்ஏ எஸ்.வி.மோகன் ரெட்டி இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: