கஜா புயலுக்கு காற்றில் பறந்த ஓடுகள் : 1 5ம் வகுப்பு வரை ஒரே கட்டிடம், புறந்தள்ளப்படும் புளியம்பட்டி அரசு பள்ளி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே ஒரே கட்டிடத்தில் 5 வகுப்புகள் நடப்பதால் மாணவர்கள் கற்க முடியாமல் மிகவும் அவதியடைகின்றனர். எனவே, கஜா புயலால் சேதமடைந்த பள்ளியின் மெயின் கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளது.  குஜிலியம்பாறை அருகே புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியை, இடைநிலை ஆசிரியர் என 2 பேர் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் காங்கீரீட் மற்றும் ஓடுகளாலான 2 வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. 2012ம் ஆண்டு கட்டப்பட்ட ஓட்டுக் கட்டிடம் கட்டப்பட்ட நாள் முதல் பராமரிப்பின்றி இருந்து வந்தது.

மேலும், கடந்த மாதம் வீசிய கஜா புயல் பாதிப்பால் மேற்கூரை ஓடுகளின் ஒரு பகுதி காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதனால் ‘டாப் கழன்ற நிலையில்’ பள்ளி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இங்குதான் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். மேலும், மழை நாட்களில் வகுப்பறையில் மழைநீர் ஒழுகிறது. மேலும் சேதமடைந்த ஓடுகளால், பிற ஓடுகளும் எப்போது விழும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, காங்கீரீட் கட்டிட வகுப்பறையில் பயிலும் 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து அமர வைக்கப்பட்டு படித்து வருகின்றனர். இதனால் தற்போது ஒரே கட்டிடத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். அருகருகே ஐந்து வகுப்புகளும் நடப்பதால் மாணவர்கள் எழுப்பும் அதிக சப்தம் காரணமாக ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுப்பதிலும், மாணவர்கள் கல்வி கற்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி சேதமடைந்த ஓடுகளை சீரமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: