கஜா புயல் தாக்கி ஒரு மாதமான நிலையில் கீற்று விலை உயர்வால் வீடுகளை சீரமைக்க முடியாத அவலம்

நாகை: கஜா புயல் தாக்கி ஒரு மாதம் ஆன நிலையில் தமிழக அரசு மீட்பு பணியை துரிதமாக செய்யாததால் நுற்றுக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. கீற்று தட்டுப்பாடு, விலை உயர்வுகளால் வீடுகளை சீரமைக்க பணம் இல்லாமல் மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். கஜா புயல்  நாகைக்கும் வேதாரணயத்திற்கும் இடையே கடந்த மாதம் 15ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கரையை கடந்தது. இந்த புயல் 16ம் தேதி காலை 6.30 மணி வரை இடைவிடாமல் பலத்த காற்று வீசியது. இதில் அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை  புயலின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தது. இந்த புயலினால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளனது. நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் 13 பேர் இறந்துள்ளனர். குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள்  1,20,909 சேதமடைந்தது. 21,002 கால்நடைகள் இறந்தன.

3,886 ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்ட 6,80,050 தென்னை மரங்களும், 2,401 ஹெக்டேரில் மா மரங்கள், 223 ஹெக்டேரில் வாழை, 1,022 ஹெக்டேரில் முந்திரி, 25 ஹெக்டேரில்  எலுமிச்சை, 8 ஹெக்டேரில் கொய்யா, 221 ஹெக்டேரில் புளி, 330 ஹெக்டேரில் காய்கறி பயிர்கள், 262 ஹெக்டேரில் மலர் வகை செடிகள் பாதிப்புக்குள்ளானது. மேலும் 2,770 நாட்டு படகுகளும், 915 விசைப் படகுகளும், 4,611 படகு இன்ஜின்களும் சேதமடைந்தது. சேதமடைந்த 49 ஆயிரம் மின்கம்பங்களில் 43,157 சரி செய்யப்பட்டுள்ளது. உயர் மற்றும் குறைந்த மின் பாதை 13,523 கி.மீ. தூரம் சேதமடைந்துள்ளது என்று அரசின் சார்பில் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டாலும் சேதங்கள் என்பது அதிகமாக உள்ளது.

முக்கிய சாலையில் விழுந்த மரங்களை மட்டும் அன்றே அகற்றி சிறிய வாகனங்கள் போக்குவரத்துக்கு வழி வகை செய்யப்பட்டது. உள் சாலையில் உள்ள மரங்களை அகற்றி போக்குவரத்து ஏற்படுத்த 4 நாட்கள் ஆனது. இதனால்  உள் கிராமங்கள் மற்ற கிராமங்களில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. கிராமங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. வீடுகள் சேதம் அடைந்ததால் சமையல் செய்ய கூட முடியாமல் மக்கள் தவித்தனர். ஏராளமான மக்கள் தங்கள் உடமைகளை, கால்நடைகளை விட்டுவிட்டு அரசு கட்டிடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

புயல் பாதித்த பகுதியில் 7 நாள் கழித்து நாகை நகரத்திற்கு முதன் முதலில் மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது நகர பகுதிகளில் பெரும்பாலான பகுதி மின் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில்  இன்னமும் 40 சதவீத கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படவில்லை. இன்றுடன் புயல் அடித்து 30 நாள் ஆன நிலையில் பல கிராம மக்கள் மின் வெளிச்சம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கு, அகல் விளக்கு வெளிச்சத்தில் 30நாள் இரவை கழித்துள்ளனர்.  

மின்சாரம் இல்லாததால் கொசுக்கடி போன்ற பிரச்னையால் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: