தமிழில் தந்தி முறையை கண்டுபிடித்த போஸ்ட் மாஸ்டர் காலமானார்: அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று உடல் தானம்

திருச்சி:  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவலிங்கம் (94). இவர் அஞ்சல்துறையில் 1944ல் பணியில் சேர்ந்து கடைசியாக அரியலூர் போஸ்ட் மாஸ்ட்ராக பணியாற்றி 1982ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர்  திருச்சி கே.கே.நகர் சேஷசாயி நகர் அன்னை தெரசா தெருவில் மகன்களுடன் வசித்து வந்தார். இவர் நேற்று காலை காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு  தானம் செய்ய மகன்கள், மகள்  மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று ஒப்படைக்க உள்ளனர். சிவலிங்கத்தின் உடலுக்கு அஞ்சல்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.அஞ்சல் துறையில் தந்தி அனுப்பும் முறை ஆங்கிலத்தில் இருந்து வந்தது. மோர்ஸ் கோடு பயன்படுத்தி ஒவ்வொரு குறியீடுக்கும் ஒரு ஆங்கில வார்த்தை அச்சிடப்பட்டு தந்தி அனுப்பப்பட்டு வந்தது. தந்தியை கிராம புற மக்கள்  எளிதாக தெரிந்து கொள்ள தமிழில் அனுப்பும் முறையை கண்டுபிடிக்க சிவலிங்கம் முயற்சி மேற்கொண்டார்.

தமிழில் தந்தி அனுப்பும் முறையை 1956ல் கண்டுபிடித்து சாதனையும் படைத்தார். இதேபோல் மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளுக்கு ஏற்ப மோர்ஸ் குறியீடுகளை கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் இத்திட்டம்  கைவிடப்பட்டது.ஆனாலும் சிவலிங்கத்தின் சேவையை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இவரது சிறப்பான சேவையை பாராட்டி 1992ல் அப்ேபாதைய முதல்வர் கருணாநிதி, சிவலிங்கத்துக்கு பொற்கிழி வழங்கியுள்ளார். தந்தி  சேவையை அஞ்சல்துறை நிறுத்திவிட்ட நிலையில் தற்போது அவரது இறப்பு அஞ்சல்துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு தமிழ்செல்வன் (70), மோர்ஸ் (62) என்ற மகன்களும், மனோன்மணி (60) என்ற மகளும்  உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: