மபி முதல்வராக 17-ம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத்

போபால்: மத்தியப் பிரதேச மாநில முதல்வராக காங்கிரசின் மூத்த தலைவர் கமல்நாத் வரும் 17ம் தேதி பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, முதல்வர் தேர்வு குறித்து ஆலோசிக்க, கட்சியின் தலைவர் ராகுல் தலைமையிலான கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மத்திய பிரதேச மூத்த தலைவர் கமல்நாத் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், விவேக் தன்கா உள்ளிட்டோர் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, கட்சியின் சட்டப்பேரவை தலைவராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினர். அவரும், கமல்நாத்தை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார்.

ஆளுநரை சந்தித்த பிறகு ராஜ்பவன் வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்நாத், லால் பரேட் மைதானத்தில் வரும் 17ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்க இருப்பதாக அறிவித்தார்.

பஞ்சாப் பேரவையில் எதிர்ப்பு

மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு செய்யப்பட்டதற்கு பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் அம்மாநில எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவையில் இவ்விவகாரத்தை எழுப்பிய அக்கட்சி எம்எல்ஏ பிக்ராம் சிங் மஜிதியா, ‘‘1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் தொடர்புடையவர் கமல்நாத். அவரை முதல்வராக காங்கிரஸ் நியமிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம்’’ என்றார். இந்த விவகாரத்தால் பஞ்சாப் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: