ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜர்... 20-ம் தேதி ஓ.பி.எஸ். ஆஜராக சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்துஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து தினமும் அப்போலோ மருத்துவக் குழுவிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அவரின் பரிந்துரையில் தான், சுகாதாரத்துறை சார்பில் ஒரு மருத்துவ குழுவும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கண்காணிக்க நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவில் இடம்பெற்ற டாக்டர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜரான போது ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்திருந்தனர். எனவே, அந்த குழுவை பணி செய்ய விடாமல் தடுத்தது யார் என்ற கேள்வியும் ஆணையத்திற்கு எழுந்துள்ளது.

இதேபோல், ஜெயலலிதாவிற்கு எந்தவிதமான சிகிச்சைகள், மருந்துகள் அளிக்கப்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை சார்பில் அந்த காலகட்டத்தில் ஒரு அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க டாக்டர்கள் வலியுறுத்தியிருந்த போதும் கடைசி வரை அந்த சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை.

எனவே, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 14-ம் தேதியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக வரும் 18ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் வரும் 20ம் தேதி ஆஜராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: