சேலம் அரசு மருத்துவமனையில் விபத்தில் மரணமடைந்த டாக்டர் உடலை வாங்க 3 மனைவி குடும்பத்தினர் போட்டா போட்டி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் விபத்தில் இறந்த டாக்டர் உடலை வாங்க, 3 மனைவிகளின் குடும்பத்தினர் போட்டிபோட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (64). டாக்டர். இவர் அதே பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். இவரது முதல் மனைவி திலகவதி. இவர் இறந்துவிட்டார். இவர்களது மகன் டாக்டர் அருண், ஆத்தூரில் வசித்து வருகிறார். முருகனின் 2வது மனைவி உமா, அயோத்தியாப்பட்டணத்தில் வசிக்கிறார். இதையடுத்து டாக்டர் முருகன் மூன்றாவதாக சந்திரா (34) என்ற பெண்ணுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி டாக்டர் முருகன், நாமக்கல்  திருச்சி சாலையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் முருகன் இறந்து விட்டார். இதைதொடர்ந்து நேற்று அவரது உடல், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உயிரிழந்த டாக்டர் முருகனுக்கு பலகோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை பெற முதல் மனைவியின் மகன் அருண் மற்றும் 2வது மனைவி உமா, 3வது மனைவி சந்திரா ஆகியோரின் குடும்பத்தினர் சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். 3 பேரின் உறவினர்களும், உடலை தாங்கள் தான் பெற்றுச்செல்வோம் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2வது மனைவி உமா, திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் முதல் மனைவியின் மகனான அருணிடம் இறந்த டாக்டரின் உடலை ஒப்படைத்தனர். அவர், டாக்டரின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு உடலை கொண்டு சென்றார். இதுகுறித்து உமாவின் உறவினர்கள் கூறுகையில், முறைப்படி டாக்டர் தாலிகட்டிய மனைவி உமா தான். ஆனால் உடலை அவர்களிடம்  தராமல், போலீசார் பணத்தை பெற்றுக்கொண்டு முதல் மனைவியின் மகனிடம் ஒப்படைத்து விட்டனர். டாக்டர் சாவிலும் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்த சம்பவத்தால், சேலம் அரசு மருத்துமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: