சட்டப்படி நடவடிக்கைஅரசு இனியாவது எடுக்குமா? நித்தியானந்தன் ஜெயராமன், சுற்றுச்சூழல் ஆர்வலர்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தருண் அகர்வால் கமிட்டியின் வேலை கிடையாது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த கமிட்டி அமைக்கும் போதே நீதிபதிகள் சந்துரு, சிவசுப்ரமணியன் ஆகிய இரண்டு பேர் பெயரையும் பரிசீலித்தது. இவர்கள், நேர்மையானவர்கள். இவர்கள் 2 பேரையும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எதிர்த்தது. தமிழகத்தில் நீதிபதிகள் ஒரு தலைபட்சமாக இருப்பார்கள் என்று கூறியது. அதன்பிறகு தான் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி தருண் அகர்வாலை தேசிய பசுமைத்தீர்ப்பாயம் நியமித்தது.

 தருண் அகர்வால் நியமிக்கப்பட்டதும், பேராசிரியர் பாத்திமா மனு தாக்கல் செய்தார். இவர் மீது சில புகார்கள் உள்ளது. எனவே, களங்கம் இல்லாத நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மனு மீது எவ்விதமான விசாரணையும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு சம்மந்தப்பட்ட கமிட்டி, தூத்துக்குடியில், மக்களை சந்தித்து பாதிப்பு குறித்து கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது.

தொழிற்சாலை இயங்க வேண்டுமா? அல்லது ஓட வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்ய நீதிமன்றம் இருக்கிறது. கமிட்டி நடத்திய  ஆய்வு என்பது, நீதிமன்றம் போட்ட உத்தரவுக்கு உட்பட்டு நடந்தது போல் இல்லை. இந்த கமிட்டி என்னை பொறுத்தவரையில், அவர்களுக்கு கொடுத்த வரம்பை மீறி, ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு என்ற வடிவத்தில் ஒரு அறிக்கையை கொடுக்கிறது. அப்போ நீதிமன்றத்திற்கு என்ன வேலை. இதில் கோர்ட்டினுடைய வேலையை கமிட்டிக்கு ஒப்படைத்துவிட்டீர்களா? அப்படியிருந்தால் கோர்ட் போல கமிட்டி செயல்பட்டிருக்க வேண்டும்.  எந்தவிதமான ஆய்வுகளும் அது மேற்கொள்ளப்படவில்லை.

எல்லா தரப்பினரிடமும் முழுமையாக விசாரிக்கவில்லை. மாசு ஏற்பட்டிருக்கிறதா அல்லது அறவே மாசு ஏற்படவில்லையா என்ற விஷயம் குறித்து ஆய்வு செய்த அதன் முடிவுகள்  இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனென்றால் அது குறித்து அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியாத வகையில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் அந்த ஆய்வு அறிக்கையை எப்படி நம்புவது? இந்த அறிக்கையை மறைமுகமாக வைத்திருக்கக்கூடிய பசுமை தீர்ப்பாயத்தை எப்படி நம்புவது?  

ஸ்டெர்லைட் ஆலை செய்திருக்கக்கூடிய தவறுகள் கொஞ்சம், நஞ்சம் கிடையாது. அந்த தவறுகள் அனைத்தும் தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தின் வழக்கில் உள்ளடங்கவில்லை. தற்போது, பசுமை தீர்ப்பாயத்தின் அறிக்கை, தீர்ப்பு போல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் எனக்கு 100 சதவீதம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. தமிழக அரசு உண்மையான அரசு என்பது போல் தெரியவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் தூத்துக்குடி மக்களுக்கு எவ்வளவோ செய்திருக்கலாம். சட்டப்பேரவை கூட்டி கொள்கை முடிவு எடுத்து சட்டமாக வெளியிட வேண்டும் எனக்கூறினோம். அதை இதுநாள் வரை செய்யாததற்கு என்ன காரணம்?, தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில், தமிழகத்தின் சார்பில் யாரும் வரக்கூடாது என்று கூறும்போது, அதற்கு ஏன் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தருண் அகர்வால் மீது ஊழல் புகார் எழுப்பியிருந்த போது, அரசு ஏன் அந்த கேள்வியை எடுத்து வைக்கவில்லை. அரசின் எண்ணங்கள் உண்மையாக இருந்தால், எந்த கோர்ட்டாலும் திறக்க முடியாது என்று கூறுவதை விட்டு, விட்டு அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: