மவுண்ட் பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட தடையில்லை: மாநகராட்சி ஒப்புதல்

சென்னை: மவுண்ட் பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலை மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கிலோ மீட்டர் நீளமுள்ள மவுண்ட் பூந்தமல்லி- ஆவடி நெடுஞ்சாலைக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட சாலைக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுவது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மண்டல அலுவலரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே, கடந்த 2001ம் ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான கட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது போன்ற தீர்மானங்களை இயற்றி அரசுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு ஆணையிடப்பட்டது. இந்நிலையில், முதல்வரால் அறிவிக்கப்பட்ட மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையாகும் என்பதாலும், இந்த சாலையில் மாநகராட்சி சுத்தம் செய்யும் பணிகளை மட்டும் செய்வதாலும் 20.8 கிலோ மீட்டர் நீளமுள்ள மவுண்ட் பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு முன்னாள் முதல் எம்.ஜி.ஆர் நெடுஞ்சாலை என பெயர் சூட்ட ஆட்சேபனை இல்லை என்றும், இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என பெயர் சூட்ட எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: