கால் டாக்சி டிரைவரை மிரட்டிய விவகாரத்தில் திடீர் திருப்பம் 50 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஏட்டு

* வீட்டை விட்டு தனியாக ஓடி வரும் பெண்களை மடக்கி புரோக்கர்களுக்கு விற்பனை

* அதிகாரிகள் துணையுடன் தினமும் ரூ.20 ஆயிரம் மாமூல் வசூல்

* ஓட்டலில் மினி காவல் நிலையம் நடத்தியதும் அம்பலம்

சென்னை: புரோக்கர்களுடன் இணைந்து 50 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த தலைமை காவலரை உயர் போலீசார் அதிரடியாக நேற்று சஸ்பெண்ட் செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (37). இவர், என்.எஸ்.கே. நகர் பேருந்து நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாடி தில்லை நகர் மெயின் ரோட்டை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதன் (31) என்பவர் ஜெயந்தியிடம் அணுகியுள்ளர். அதற்கு ஜெயந்தி, இருவரும் ஒன்றாக இருப்பதற்கு ரூ.2000 கட்டணமாக கேட்டுள்ளார். பின்னர் ஒரு வழியாக ரூ.1500 பேசி, இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு விஸ்வநாதனிடம் பணத்தை ஜெயந்தி கேட்டுள்ளார். அதற்கு அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் விஸ்வநாதனிடம் அதிகளவில் பணம் இருந்ததால் முதலில் பேசியபடி ரூ.2,000 கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியாக கால் டாக்சி டிரைவர் மீது மணி பர்சை திருடியதாக, ஜெயந்தி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் பார்த்திபனிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தலைமை காவலர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு சென்று பாலியல் புரோக்கர் ஜெயந்தியுடன் ேசர்ந்து கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதனை கடுமையாக அடித்து உதைத்து அவர் ஓட்டிவந்த பைக்கை பறித்துக்வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். பிறகு சம்பவம் குறித்து  விஸ்வநாதன் அமைந்தகரை காவல் நிலையத்தில் தலைமை காவலர் பார்த்திபன் மற்றும் பாலியல் புரோக்கர் ஜெயந்தி மீது புகார் அளித்தார். அந்த புகாரின்படி அமைந்தகரை போலீசார் பாலியல் புரோக்கர் ஜெயந்தியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சம்பந்தப்பட்ட தலைமை காவலரை போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயந்தி கொடுத்த புகாரின்படிதான், நான் விசாரணை நடத்தினேன் என்று கூறியுள்ளார். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், ஜெயந்தி ெசல்போனை பெற்று ஆய்வு செய்தனர். அப்போது ஜெயந்தி கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் பார்த்திபனிடம் பலமுறை பேசியது உறுதி செய்யப்பட்டது. அதன்படி ஜெயந்தியிடம் போலீசார் அவர்கள் பாணியில் விசாரணை நடத்தினர்.அப்போது, தலைமை காவலர் பார்த்திபனுடன் சேர்ந்து ஜெயந்தி பணம் பறிக்க நாடகமாடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அமைந்தகரை போலீசார் தகவல் கொடுத்தனர்.

பின்னர் உயர் போலீசார் உத்தரவுப்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் பார்த்திபன் மற்றும் பாலியல் புரோக்கர் ஜெயந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பாலியல் புரோக்கர் ஜெயந்தியுடன் தலைமை காவலர் கூட்டு சேர்ந்து கோயம்பேடு பகுதியில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்தியது, மாமூல் வசூலித்தது உட்பட பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவந்தது. தலைமை காவலர் பார்த்திபன் மற்றும் பாலியல் புரோக்கர் ஜெயந்தி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு தலைமை காவலராக பார்த்திபன் பணியாற்றி வருகிறார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவார். அப்போது வெளிமாநில மற்றும் வெளியூர்களில் இருந்து வீட்டை விட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஓடி வந்து எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி வரும் இளம்பெண்களை கண்காணிப்பார். பிறகு அவர்களிடம் சென்று உதவி செய்வது போல் நடிப்பார். பார்த்திபன் காவலர் சீருடையில் இருப்பதால் இளம்பெண்களும் அதை நம்பி அவருடன் செல்வார்கள்.அப்படி பார்த்திபனுடன் வரும் இளம்பெண்களை பாலியல் தொழில் ெசய்யும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் புரோக்கர் ஜெயந்தியிடம் ஒப்படைப்பார்.

பிறகு இளம்பெண்களிடம் ஜெயந்தி கூறும்படி கேட்க வேண்டும். இல்லை என்றால், உங்களை பல வழக்குகளில் சிக்கவைத்து சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டுவார். வீட்டை விட்டு ஓடி வரும் இளம்பெண்கள் வேறு வழியின்றி சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தலைமை காவலர் பார்த்திபன் மற்றும் ஜெயந்தி கூறுவதை கேட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுபோல், கடந்த ஓராண்டில் மட்டும் பட்டதாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை தலைமை காவலர் பார்த்திபன் பாலியல் புரோக்கர் ஜெயந்தியுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்க்கையை சீரழித்து வந்துள்ளார். தலைமை காவலர் பார்த்திபனுக்கு ஆந்திரா மற்றும் மும்பையை சேர்ந்த பல பாலியல் புரோக்கர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் சிக்கும் பெண்களை ஒரு மாதம் வைத்திருந்து உடல் அமைப்புக்கு ஏற்ற வகையில் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்திற்கு பாலியல் புரோக்கர்களிடம் ரகசியமாக விற்று விடுவார். இந்த சம்பவம் குறித்து உடன் பணியாற்றும் போலீசாருக்கு தெரியவந்தது. உடனே தலைமை காவலர் பார்த்திபனுடைய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆதாரங்களுடன் உயர் போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் புகாரின்படி நடவடிக்கை எடுக்காமல் உயர் போலீசார் பார்த்திபனை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக வைத்து கொண்டனர்.ஏன் என்றால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தலைமை காவலரான பார்த்திபன் சிஎம்பிடி காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதனால் சிஎம்பிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனைத்து இடங்களும் அவருக்கு அத்துப்படி. கோயம்பேடு பேருந்து நிலையம் சுற்றிலும் இரவு நேரத்தில் சைக்கிள் மற்றும் பைக்கில் 27 நடமாடும் டீக்கடைகள் இயங்குகிறது. ஒவ்வொருவரும் பேருந்து நிலையத்தில் டீ விற்பனை செய்ய வேண்டும் என்றால் தினமும் ரூ.450 காவல் நிலையத்திற்கு மாமூலாக கொடுக்க வேண்டும். அதேபோல் பேருந்து நிலையத்தின் முன்பு 40க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களும் ஒவ்வொரு நாளும் தலா ரூ.100 கொடுக்க ேவண்டும். அனைவரிடமும் பணத்தை வசூலித்து உயர் அதிகாரிகளுக்கு தலைமை காவலர் பார்த்திபன் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பும் அதோடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் என்பதால் பல முறைகேடுகளை அவர் ரகசியமாக செய்து வந்துள்ளார்.  சரியாக மாமூல் கொடுக்காத நபர்களை தனியாக விசாரணை நடத்த அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் மினி காவல் நிலையம் போல் நடத்தி வந்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால் ஒவ்வொரு நாளும் தலைமை காவலர் பார்த்திபன் ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமல் வசூலித்து வந்துள்ளார். அப்படி வசூலிக்கும் பணத்தை உயர் அதிகாரிகளுக்கு சரியாக பிரித்து கொடுத்துவிடுவார். பணம் சரியாக வருவதால் தலைமை காவலர் பார்த்திபன் செய்த தவறுகளை உயர் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உரிய ஆதாரத்துடன் சிக்கி கொண்டதால் தப்பிக்க முடியாமல் பார்த்திபன் மாட்டிக்கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதுக்கு பயந்து தலைமறைவு

தலைமை காவலர் பார்த்திபன் மீது அமைந்தகரை போலீசார் ஐபிசி 323, 384, 506(1) மற்றும் 3(2)(ஏ), 4(1), 5(1)(ஏ) ஐடிபி ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பாலியல் புரோக்கர் ஜெயந்தியையும் போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்த அறிக்கையை அமைந்தகரை போலீசார் உயர் போலீசாருக்கு  அளித்தனர். அதன்படி உயர் போலீசார் தலைமை காவலர் பார்த்திபனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். போலீசாரின் விசாணைக்கு பிறகு தாம் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்து தலைமை காவலர் பார்த்திபன் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமை காவலர் ஒருவர் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: