மார்த்தாண்டம் அருகே குடிமகன்களின் பாராக மாறிய அரசு கட்டிடம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து  கீழ்பம்மத்திற்கு சாலை ெசல்கிறது. இந்த சாலை குலசேகரம் சாலையுடன் சேரும் பகுதிக்கு சற்று முன்னதாக கூட்டுறவு பால் விநியோக உற்பத்தியாளர் ஒன்றியம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதற்கான  கட்டிடத்திற்கு 1979ல் அப்போதைய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் 2.2.85ல் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அப்போதைய குமரி மாவட்ட கலெக்டர்  பழ.கருப்பையாயாவால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் உபரியாக வருவதை கொண்டு பால் குளிரூட்டும் நிலையமும்  செயல்பட்டு வந்தது. ஆனால் நாளடைவில் இந்த நிறுவனம் நலிவடைய தொடங்கியது. பின்னர் செயல்படாமல் மூடப்பட்டு விட்டது. தற்போது பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. இதனால்  கட்டிடம் சிதைந்தும், அங்குள்ள இயந்திரங்கள் துருப்பிடித்தும் பாழாகி  வருகின்றன.

மேலும் இந்த நிறுவன வளாகத்தில் பலரும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.  அவை மலைபோல குவிந்து அந்த பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. இதே போல அந்த வளாகம் இரவு நேரங்களில் ‘குடி’மகன்களில் பாராக ெசயல்பட்டு வருகிறது. அவர்கள் வீசி எறியும் தண்ணீர் பாக்கெட், கப்புகள், எஞ்சிய உணவு வகைகள், மது பாட்டில்கள் என சிதறி கிடக்கிறது. இந்த பகுதி உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு  உட்பட்டது. இதன் அருகில் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் இப்பகுதியால், அருகில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியை தூய்மைப்படுத்தி பராமரித்து வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். வாடகை கட்டிடங்களில் செயல்படும் ஏதாவது அரசு அலுவலகத்தை இங்கு செயல்படுத்தலாம். அல்லது குறைந்த பட்சம் நூலகமாவது அமைக்கலாம் என அந்த பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்களா?

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: