கொழும்பு: இலங்கை அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பேர்ஸ்டோவின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்துள்ளது.
சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் 14, ஜென்னிங்ஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தனர். பேர்ஸ்டோ - கேப்டன் ஜோ ரூட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது. ரூட் 46 ரன் எடுத்து வெளியேற, பேர்ஸ்டோ - பென் ஸ்டோக்ஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தனர்.
ஸ்டோக்ஸ் 57 ரன் (88 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பேர்ஸ்டோ 110 ரன் (186 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சந்தகன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோ அடித்த 6வது சதம் இது. அடுத்து வந்த பட்லர் 16, பென் போக்ஸ் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்துள்ளது. மொயீன் 23, ரஷித் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் சந்தகன் 4, புஷ்பகுமாரா 2, தில்ருவன் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி