சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் இருந்து சென்னைக்குத் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளதால் கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஒரு நாளைக்கு 25 லாரிகளில் தேங்காய் கொண்டுவரப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் புயல் பாதித்த பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு ஆகிய பகுதிகளில் இலட்சத்துக்கு மேற்பட்ட தென்னைகள் சாய்ந்ததால் அங்கிருந்து சென்னை சந்தைக்குத் தேங்காய் வரத்துக் குறைந்துள்ளது. புயலுக்கு முன் ஒரு நாளைக்கு 25 லாரிகளில் தேங்காய் வந்திறங்கிய நிலையில், புயலுக்குப் பின் ஒரு நாளைக்கு 15 லாரிகளே தேங்காய் வருகிறது. ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் வருவதாகவும், இப்போது பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் வரும் காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
