விவசாயிகள் தற்கொலை விவகாரம்உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து 4 வாரத்தில் பதிலளிக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. பயிர்கள் நாசமானதாலும், விவசாயத்துக்கு வாங்கிய வங்கிக் கடன் சுமையாலும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்தனர்.

ஆனால், கணக்கெடுப்பு நடத்தி 82 விவசாயிகள் மட்டுமே இறந்ததாகவும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாகவும் தமிழக அரசு கடந்தாண்டு டிசம்பரில் அறிவித்தது. இந்த நிலையில் விவசாயிகளின் தற்கொலை குறித்து கிராந்திய அக்ரி என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தது. இதில் தமிழக விவசாயிகள் தரப்பும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரனைக்கு வந்தது.

அப்போது விவசாயிகளின் தற்கொலை தடுக்க இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “விவசாய பொருட்களுக்கான நியாயமான விலை, எளிய கொள்முதல் முறை என பல்வேறு திட்டங்கள் மத்திய அரசு தரப்பில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதை மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்துகின்றன. இதுகுறித்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பிரமாண பத்திரத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும். 4 வாரத்தில் அவர்கள் பதில் தாக்கல் செய்யவேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: