63 ஆண்டுகளாக போக்குவரத்து போலீஸ் இல்லை: போலீசார் பற்றாக்குறையால் திணறும் பணகுடி காவல்நிலையம்

பணகுடி: போலீசார் பற்றாக்குறையால் திணறும் பணகுடி காவல் நிலையத்துக்கு உரிய போலீசார் நியமிக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடியில் 1955ம் ஆண்டு காவல்நிலையம் அமைக்கப்பட்டு 63 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பணகுடி காவல்நிலையம் சுமார் 71 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் பெரிய பகுதிகளான பணகுடி நகரம், காவல்கிணறு, வடக்கன்குளம், தெற்கு வள்ளியூர் எனவும் சிறிய கிராம பகுதிகளாகிய தளவாய்புரம், வட்டவிளை, ரோஸ்மியாபுரம், அண்ணாநகர்,தண்டையார்குளம், பாமன்குளம் என 71 பகுதிகள் உள்ளன.

பணகுடி பகுதியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60,200 மக்கள் தொகை இருந்துள்ளது. ஆனால் அது தற்போது பன்மடங்காக அதிகரித்துள்ளது. பணகுடி போலீஸ்நிலையத்தில் 42 போலீசார் பணியில் உள்ளனர். அதிலும் இதர பணிகளான சிசிவி கண்காணிப்புக்கு 2 பேர், கம்ப்யூட்டர் பிரிவுக்கு 2 பேர், கோர்ட் வழக்குகளுக்கு 2 பேர், டிஎஸ்பி அலுவலகம் பணி 2 பேர், காவல்கிணறு செக்போஸ்ட் 1, வடக்கன்குளம் புறகாவல்நிலையம் 4 பேர், காவல்நிலையம் தொடர்பான எஸ்.பி அலுவலக பணி 1, சிலைதடுப்பு பிரிவு 1, இன்ஸ்பெக்டர் டிரைவர் 2 பேர், மேலும் வழக்குகள் தொடர்பாக செல்லுதல் என 20க்கும் மேற்பட்ட போலீசார் இதர பணிகளுக்கு செல்ல மீதமிருக்கும் 22 பேர்களில் 2 எஸ்.ஐக்கள், 1 இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு எஸ்.ஐக்கள் விடுப்பில் உள்ளவர்கள் போக 10க்கும் குறைவான காவலர்களே பணியில் உள்ளனர்.

மேலும் பணகுடி, வடக்கன்குளம், தெற்கு வள்ளியூர் பகுதிகளில் பல பள்ளிகள் உள்ளன. கன்னியாகுமரி நான்குவழிச்சாலையை கடந்து பள்ளிக்கு பயணிக்கும் குழந்தைகள், மின்சாரவாரிய அலுவலக பகுதி, நெருஞ்சிகாலனி, காவல்கிணறு விலக்கு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த 63 ஆண்டுகளாக பணகுடி பகுதிக்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. பணகுடி மக்கள் சார்பில் பலமுறை போக்குவரத்து காவலர்கள் நியமிக்க கோரிக்கை வைத்தும் இதுவரை போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்படவில்லை.இது குறித்து பணகுடி பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த 10 வருடங்களாக பணகுடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் போதிய காவலர்கள் இல்லை. அதேபோல பணகுடி பகுதியில் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நான்குவழிச்சாலையை கடந்து ஏராளமான பள்ளி வாகனங்கள் செல்வதால் காலை மாலை போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக பணியமர்த்த வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: