ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை டிச.10ம் தேதிக்குள் முடிக்க திட்டம்: ஆறுமுகசாமி ஆணையம் முடிவு, தமிழ், ஆங்கிலத்தில் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் டிச.10ம் தேதிக்குள் தனது விசாரணையை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ், ஆங்கிலத்தில் இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது என்று விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், நவம்பர் 22ம் தேதியில் இருந்து தான் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்கினார். இந்த ஆணையத்தின் சார்பில், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 118 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தி உள்ளார். அவர்களின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்துள்ளார்.

இதுவரை வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நடத்தி முடித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் இன்னும் 11 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டியது உள்ளது. இதைதொடர்ந்து அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, சசிகலா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட சில அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை அனைத்தையும் டிசம்பர் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்பிறகு, சசிகலா தரப்பு யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது குறித்து பரிசீலிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுடன் காணொலி காட்சி(வீடியோ கான்பரன்சிங்) மூலம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி முன்னிலையில் இந்த விசாரணையை மேற்கொள்ளவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று சசிகலாவிடம், நேரடியாக சிறைக்கு சென்று விசாரணை நடத்த பெங்களூர் சிறைத்துறையிடம் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. . இதற்கிடையே ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

எனவே தற்போது முதலே அறிக்கை தயாரிக்கும் பணியில் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என தனித்தனியாக இரண்டு மொழிகளில் தமிழக அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை பிப்ரவரி 24ம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: