கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கொச்சுவேளி பயணிகள் ரயிலுக்கு மாற்றம் : நேற்று முதல் அமல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை கொச்சுவேளி ரயிலுக்கு மாற்றம் செய்வது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு இயக்கத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தெற்கு ரயில்வேயில் ரயில் எண்: 12633 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேருகிறது. இவ்வாறு வந்த ரயிலின் காலி பெட்டிகள் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பகல் முழுவதும் நிறுத்தி வைக்க இடம் இல்லாத காரணத்தால் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு காலிபெட்டிகளாக கொண்டுவந்து நிறுத்திவைக்கப்படுகிறது.  இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் தண்ணீர் நிரப்பி சுத்தம் செய்துவிட்டு மாலை 3 மணியளிவில் காலியாக கன்னியாகுமரிக்கு கொண்டு சென்றுவிட்டு அங்கிருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையில் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரிக்கு வந்து சேரும் ரயில்பெட்டிகள் காலியாக நாகர்கோவிலுக்கு வந்து விட்டு நாகர்கோவிலில் இருந்து காலை 7.55 மணிக்கு கொச்சுவேளி செல்லும் ரயில் எண்: 56318 பயணிகள் ரயிலாக இயக்கப்படும். இவ்வாறு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் ரயில் பெட்டிகள் ரயில் எண்: 56317 கொச்சுவேளி  நாகர்கோவில் பயணிகள் ரயிலாக கொச்சுவேளியில் இருந்து பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு பகல் 1.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது. பின்னர் இந்த ரயில் கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று மாலை 5.20 மணிக்கு வழக்கம்போல் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலாக புறப்பட்டு செல்லும். கேரளா பயணிகள் இந்த கன்னியாகுமரி ரயிலை முழுமையாக பயன்படுத்திட வாய்ப்பு இல்லை.

கொச்சுவேளியில் இருந்து பயணிகள் ரயில் பெட்டிகள் காலை 11.40 மணிக்கே புறப்பட்டுவிடும். கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.20 புறப்படும் என்பதால் கொச்சுவேளியிருந்து 11.40 மணிக்கே கேரளா பயணிகள் காத்திருந்து பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. இது முழுக்க முழுக்க ரயில்வேதுறை பெட்டிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் என்ற நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. ஏற்கனவே கோயம்புத்தூர்  நாகர்கோவில்  சூப்பர்பாஸ்ட் ரயில் பெட்டிகளை கொண்டு நாகர்கோவில்  திருவனந்தபுரம்  பயணிகள் ரயில் இவ்வாறுதான் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் பெட்டிகள் காலியாக பகல்  முழுவதும் நிறுத்திவைக்கப்படுவதால் நிலவிவந்த இடநெருக்கடியும் குறையும். இதனால் ஓர் புதிய ரயில் இயக்க முடியும்.

நாகர்கோவிலுக்கு தொடர் ரயில்கள்

திருவனந்தபுரத்தில் இருந்து இனி காலையில் தொடர்ச்சியாக நாகர்கோவிலுக்கு ரயில்கள் இயக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. புனலூர்  கன்னியாகுமரி காலை 9.25க்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும். மும்பை  கன்னியாகுமரி காலை 10:15க்கும், கொச்சுவேளி நாகர்கோவில் பகல் 11.52க்கும் புறப்படும். தொடர்ந்து திருவனந்தபுரம்  திருச்சி இன்டர்சிட்டி  பகல் 11.45க்கும், கொல்லம் கன்னியாகுமரி மெமு பகல் 12.47க்கும், பெங்களுர்  கன்னியாகுமரி பகல் 1:30க்கும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ரயில் தாமதமானால் பாதிப்பு

சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகள் ரயிலும் தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் காலையில் திருவனந்தபுரத்திற்கு அலுவல் காரணமாக செல்லும் பயணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் கொச்சுவேளி  நாகர்கோவில் பயணிகள் ரயில் ஏதேனும் காரணங்களுக்காக காலதாமதமாக வந்தால் சென்னை செல்லும் கன்னியாகுமரி ரயில் காலதாமதமாக இயக்கப்படும். இந்த ரயில் பெட்டிகள் கழுவி சுத்தம் செய்ய, நீர் நிரப்ப போதிய காலம் இல்லாத காரணத்தால் துர்நாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: