ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை பராமரிப்பது தொடர்பாக ஜெ.தீபா, தீபக் பதில் தர வேண்டும்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஜெ.தீபா, தீபக் ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் புகழேந்தி. ஜெயலலிதா பேரவை தென் சென்னை மாவட்ட செயலாளர். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 செப்டம்பர் 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தீர்ப்பில் ஜெயலலிதாவின் அப்போதைய சொத்து மதிப்பு ரூ.55 கோடியே 2 லட்சத்து 48,215 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017 பிப்ரவரி 4ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார். அவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கோடநாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை  எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகி கூட இல்லை. எனவே, இந்த சொத்துக்களை நிர்வாகம் செய்ய நீதிமன்றம் ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது’ என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, புகழேந்தி மேல்முறையீடு செய்தார். மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவின் அப்போதைய சொத்து மதிப்பு ரூ.55 கோடியே 2 லட்சத்து 48,215 என்று பட்டியலிடப்பட்டிருந்தது. தற்போது, அதன் மதிப்பு ரூ.913 கோடியே 41 லட்சத்து 68,179 என்று கணக்கிடப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட்டில் பங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்கள் அவர் பெயரில் உள்ளன. அதேநேரம், அவரது அண்ணனின் வாரிசுகளான தீபா, தீபக் என்று இருவர் உள்ளனர். அவர்களை இந்த வழக்கில் சேர்த்து அவர்களின் கருத்து கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து தீபா, தீபக் ஆகியோரைச் சேர்த்து, அவர்கள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது. வழக்கு வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தீபா மற்றும் தீபக்கிற்கு  மனுதாரர் கூரியர், வாட்ஸ் அப், இமெயில் மூலம் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: