எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது : பி.எஸ். தனோயா பேட்டி

புதுடெல்லி: எந்த சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது என்று இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனோயா கூறியுள்ளார். தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை, வெளிநாடுகளின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் போன்றவற்றை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா தங்களுடைய ராணுவத்தை நவீனப்படுத்துவதும், புதுப்புது ஆயுதங்களை ராணுவத்தில் சேர்ப்பதும் கவலையளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்திய விமானப்படை இதுபோன்ற சவால்களை திறமையுடன் சமாளிக்கும் திறனை கொண்டுள்ளது என்றும், நாட்டின் நலனுக்காக எத்தகைய சவாலையும் சந்திக்க 24 மணி நேரமும் நமது விமானப்படை தயாராக இருக்கிறது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.

உலகிலேயே சி-17 ரக சரக்கு விமானங்களை கொண்ட 2வது மிகப்பெரிய படையாக இந்திய விமானப்படை திகழ்வதன் மூலம் பேரிடர் காலங்களில் நமது நட்பு நாடுகளுக்கு மனித நேய உதவிகளை அளிக்க முடியும். மேலும் இந்திய-பசிபிக் கடல் பகுதியில் அச்சுறுத்தல்கள் எழும் சூழல் உள்ளதால் இந்திய விமானப்படை எந்நேரமும் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் உள்ளது என்று பி.எஸ். தனோயா கூறியுள்ளார். இந்திய விமானப்படையில் மிக்-29, ஜாகுவார், மிராஜ்-2000 ஆகிய போர் விமானங்கள் பகுதி வாரியாக தரம் மேம்படுத்தப்படும் என்றும், 83 தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள், 36 ரபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு இந்திய விமானப்படை மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: