ஏமனில் தாக்குதல் தீவிரம் ஹூடேடா துறைமுகத்தில் கடும் சண்டை: 61 பேர் பலி

ஹூடேடா: ஏமன் ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் கிளர்ச்சியாளர்கள், அரசு படையினர் உட்பட 61 பேர் பலியாகி உள்ளனர். ஏமனின் முக்கிய துறைமுக நகரான ஹூடேடாவில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபியா தலைமையிலான அரசு படையினருக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்குள்ள துறைமுகத்தில் நடந்த சண்டையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் 43 பேரும், அரசு படையினர் 9 பேரும் பலியானதாக ராணுவ தகவல்கள் உறுதிபடுத்தி உள்ளன. மேலும், படுகாயமடைந்த அரசு படையினர் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

கடந்த 10 நாளில் இங்கு நடந்த சண்டையில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த 2014ல் ஏமன் தலைநகர் சனாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய போது, ஹூடேடா நகரத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஏமனின் கடல்வழி பாதையில் உள்ள மிக முக்கிய துறைமுகம் இதுவாகும். ஈரான் தலைமையிலான ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த துறைமுகம் வழியாகத்தான் ஆயுதங்களை கடத்துவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த துறைமுகத்தை மீட்பதற்காக சவுதி தலைமையிலான அரசு படை போரை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை முக்கிய மருத்துவமனையை கைப்பற்றிய அரசு படை தொடர்ந்து முன்னேறி வருகிறது.

ஏமன் உள்நாட்டு போரில் கடந்த 2015ல் சவுதி இணைந்த பிறகு 10,000 மக்கள் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துளளது. அங்கு சுமார் 1 கோடி மக்கள், குழந்தைகள் பட்டினி, ஊட்டசத்து குறைபாட்டால் தவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: