சசிகலாவை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் செல்லவில்லை டி.டி.வி.தினகரன் அணியில் மோதலா? உச்சக்கட்ட குழப்பத்தில் ஆதரவாளர்கள்

சென்னை: சசிகலாவை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் பெங்களூரு செல்லாததால் டி.டி.வி.தினகரன் அணியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உச்சக்கட்ட குழப்பம் அடைந்துள்ளனர். முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. முதலில் டி.டி.வி.தினகரன், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பின்னர் ஒரு சில நாட்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று அறிவித்தார். இதுபோன்ற முரண்பட்ட தகவலால் தினகரன் அணியில் ஒரு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரையும் பெங்களூரு அழைத்துச் சென்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதாக கூறப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன் மற்றும் தகுதி செய்யப்பட்ட எம்எல்க்கள் சிலரும் சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அப்போது, சசிகலாவின் தீவிர ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டம் எம்ல்வுமான தங்கதமிழ்செல்வன் சசிகலாவை பார்க்க பெங்களூரு செல்லவில்லை.

இது டி.டி.வி.தினகரன் அணியில் புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: டி.டி.வி.தினகரன் அணியில் உள்ளவர்கள் தாய் கழகமான அதிமுகவுக்கு மீண்டும் வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்தனர். இதனால் டி.டி.வி. அணியில் உள்ள பலர் அதிமுகவுக்கு வர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் அதிமுகவில் இணைவார்கள்.நேற்று முன்தினம்கூட சசிகலாவை சந்திக்க தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 ம்எல்ஏக்களில், 10 பேர் மட்டுமே சென்றுள்ளனர். தங்கதமிழ்செல்வன் உள்பட 8 பேர் சசிகலாவை பார்க்க செல்லவில்லை.

இவர்கள் டி.டி.வி.தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. குறிப்பாக தங்கதமிழ்ச்செல்வன் அங்கு தனி அணியாகவே செயல்படுகிறார். இவர், சசிகலாவைதான் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், தினகரன் ஆதரவாளர்களுக்கு அதிக பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவும் பிரச்னைக்கு முக்கிய காரணம் ஆகும் என்றார். டி.டி.வி.தினகரனுடன் தங்கதமிழ்ச்செல்வன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், தொண்டர்கள் உச்சக்கட்ட குழப்பம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: